காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ‘கொம்புத்துறை’ என்றழைக்கப்படும் பகுதியை ‘கடையக்குடி’ என்றும், ‘சிங்கித்துறை’ என்றழைக்கப்படும் பகுதியை ‘கற்புடையார் பள்ளி வட்டம்’ என்றும் அதிகாரப்பூர்வ பெயர்களை மட்டுமே பயன்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை, ஊடகத்துறையினரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் கடலோர பகுதிகள் - கடையக்குடி (வார்டு 1) மற்றும் கற்புடையார்பள்ளி வட்டம் (வார்டு 7) ஆகும். இப்பகுதிகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது - கொம்புத்துறை என்றும், சிங்கித்துறை என்றும் குறிப்பிடுகின்றன.
கொம்புத்துறை, சிங்கித்துறை ஆகியவை அதிகாரப்பூர்வ, அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர்கள் அல்ல. கொம்புத்துறை பகுதியின் - அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர், கடையக்குடி ஆகும்; அது போல - சிங்கித்துறை பகுதியின் - அரசு ஆவணங்கள் அடிப்படையிலான பெயர், கற்புடையார் பள்ளி வட்டம் ஆகும்.
இருப்பினும் - இவ்விரு இடங்கள் குறித்த செய்திகள் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இடம்பெறும்போது - அப்பகுதிகள் கொம்புத்துறை என்றும், சிங்கித்துறை என்றும் குறிப்பிடப்படுவது மட்டும் அல்லாது, திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தனி கிராமங்களாகவும் ("VILLAGES") குறிப்பிடப்படுகின்றன. ஆனால் - அவை தனி கிராமங்கள் அல்ல; காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும்.
எனவே - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் மற்றும் மீன்வளத்துறை மூலம் வெளியிடப்படும் இப்பகுதிகள் குறித்த செய்திகளில், அரசு ஆவணங்கள்படியிலான அதிகாரப்பூர்வமான பெயர்களை பயன்படுத்தவும் (கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம்), மேலும் - அவை காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள பகுதிகள், தனி கிராமங்கள் அல்ல என்ற உண்மையான நிலவரம் அடிப்படையிலும் செய்திகளை வெளியிடக்கோரியும் - இன்று மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடமும், மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வேண்டுகோள் மனு வழங்கப்பட்டது.
மேலும் - தூத்துக்குடி மாவட்ட ஊடகத்தினரிடமும், இது சம்பந்தமான வேண்டுகோள், நடப்பது என்ன? குழுமம் சார்பாக தூத்துக்குடியில் 05.02.2018. அன்று வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 5, 2018; 3:30 pm]
[#NEPR/2018020503]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|