தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில தேர்தல் ஆணையரும் – வார்டு மறுவரையறை ஆணையத் தலைவருமான மாலிக் ஃபெரோஸ் கான் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபனையைப் பதிவு செய்திருந்தது. அக்கூட்டத்தின் நிறைவில் அவர் உத்தரவிட்டதன் பேரில் காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை இணை இயக்குநரிடம் – வார்டு மறுவரையறை குறித்த ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்து, நேரில் விரிவான விளக்கமும் அளித்துள்ளது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகள் மறுவரையறை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. மாநிலம் முழுவதும் - டிசம்பர் இறுதியில், வரைவு வார்டுகள் விபரம் வெளியிடப்பட்டு, ஜனவரி 12 வரை - பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
இது சம்பந்தமான தூத்துக்குடி மாவட்டம் முன்னோடி கூட்டம், ஜனவரி 30 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் - மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS தலைமையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக - பிப்ரவரி 8 அன்று நான்கு மாவட்டங்களுக்கான மண்டல கூட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - வார்டுகள் மறுவரையறை ஆணையத்தின் (DELIMITATION COMMISSION) தலைவரும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் ஆணையருமான திரு மாலிக் பிரோஸ் கான் IAS (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் - வார்டுகள் மறுவரையறை குறித்து ஆட்சேபனைகள் தாக்கல் செய்தவர்களில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், காயல்பட்டினம் நகராட்சி வரைவு வார்டுகள் விபரங்கள் குறித்து தங்கள் ஆட்சேபனைகளை தெளிவாக பதிவு செய்தனர்.
கூட்டத்தின் இறுதியில் - காயல்பட்டினம் நகராட்சி வரைவு பட்டியல் குறித்த ஆட்சேபனை விபரங்களை கேட்டறிந்திட - நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு, மறுவரையறை ஆணையத்தின் தலைவர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து - பிப்ரவரி 9 அன்று காலை, காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் - இது சம்பந்தமான கூட்டம், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்ககத்தின் இணை இயக்குனர் (தேர்தல்) திருமதி பூங்கொடி அருமைக்கண்ணு, திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் திரு ராஜன் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டுள்ள வார்டுகள் வரைவு பட்டியலில் உள்ள குறைப்பாடுகளையும், மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படவில்லை என்பதனையும் விரிவாக சுட்டிக்காட்டினர்.
மேலும் - பொது மக்கள், பொது நல அமைப்புகளின் பார்வைக்கு வெளியிடப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நடப்பது என்ன? குழுமம் உருவாக்கியுள்ள வரைவு வார்டுகள் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்படியும் - அப்போது, நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் வலியுறுத்தப்பட்டது.
பெறப்பட்ட பரிந்துரைகளை மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதாக இணை இயக்குனர் - அக்கூட்டத்தின் போது, நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 9, 2018; 7:00 pm]
[#NEPR/2018020901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|