காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முயற்சியைத் தொடர்ந்து, நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரைத்து, மாநில சுகாதாரத் துறைக்கு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது. அதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன.
அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் இலவசமாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது. செப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.
இருப்பினும் - 2013 இல், தணிக்கைத்துறை - காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.
தணிக்கை ஆட்சேபனையை நீக்க - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
கடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பலனாக - இறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை (AUDIT OBJECTION) கைவிடப்பட்டுள்ளதாக டிசம்பர் மாதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எல்லாப்புகழும் இறைவனுக்கே!
தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ள நிலையில், கோமான் மொட்டையார் ஜமாஅத் அன்பளிப்பாக வழங்கியுள்ள 50 சென்ட் நிலத்தில், நவீன, அனைத்து வசதிகளையும் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட உடனடியாக நிதி ஒதுக்கிட கோரி - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அதிகாரிகளிடம், கடந்த சில நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து - இம்மாதம் 1ஆம் தேதிய கடிதம் மூலம், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா ராணி அவர்கள், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி - சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தகவல் - நடப்பது என்ன? குழுமத்திற்கு, அதிகாரப்பூர்வமாக - தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமம், சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ள உயர் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. புதனன்று (பிப்ரவரி 7) - டாக்டர் கீதா ராணி, காயல்பட்டினம் வருகை புரிந்து, கோமான் ஜமாஅத் மூலம் அரசுக்கு அன்பளிப்பாக வழங்கிய நிலத்தை பார்வையிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 9, 2018; 9:00 pm]
[#NEPR/2018020903]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|