காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் – வார்டுகள் மறுவரையறை ஆணையத்தின் தலைவரும் – மாநில தேர்தல் ஆணையருமான மாலிக் ஃபெரோஸ் கான் தலைமையில், மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகள் மறுவரையறை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. மாநிலம் முழுவதும் - டிசம்பர் இறுதியில், வரைவு வார்டுகள் விபரம் வெளியிடப்பட்டு, ஜனவரி 12 வரை - பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
இது சம்பந்தமான தூத்துக்குடி மாவட்டம் முன்னோடி கூட்டம், ஜனவரி 30 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் - மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS தலைமையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக - இன்று (பிப்ரவரி 8), நான்கு மாவட்டங்களுக்கான மண்டல கூட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வார்டுகள் மறுவரையறை ஆணையத்தின் (DELIMITATION COMMISSION) தலைவரும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் ஆணையருமான திரு மாலிக் பிரோஸ் கான் IAS (ஓய்வு) தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் - வார்டுகள் மறுவரையறை குறித்து ஆட்சேபனைகள் தாக்கல் செய்தவர்களில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், தங்கள் ஆட்சேபனைகளை தெளிவாக பதிவு செய்தனர்.
இறுதியாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுவரைமுறை குறித்த ஆட்சேபனைகள் விபரங்களை நேரடியாக சென்று கேட்டறிந்திட திருநெல்வேலி நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு ராஜன் அவர்களுக்கு, வார்டுகள் மறுவரையறை ஆணையத்தின் தலைவர் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக - நாளை காலை 10:30 அளவில் காயல்பட்டினம் நகராட்சியில் இது சம்பந்தமான கூட்டம் நடைபெறவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 8, 2018; 10:30 pm]
[#NEPR/2018020801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|