காயல்பட்டினத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து, காவல்துறை உயரதிகாரிகளான டி.ஜி.பீ., ஐ.ஜி.பீ., டி.ஐ.ஜி. ஆகியோரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல நூற்றாண்டுகளாக - அமைதி பூங்கா என்றும், குற்றங்கள் இங்கு நடப்பது மிகவும் அரிது என்றும், காவல் நிலையம் இல்லாத ஊர் என்றும் பெயர் பெற்றுள்ள காயல்பட்டினம் நகரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பது, அனைத்து மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக - பிப்ரவரி 5 அன்று, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன் ஆகியோரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - தற்போது, சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைவர் (DGP), மதுரையில் உள்ள காவல்துறை தென்மண்டல தலைவர் (IGP) மற்றும் திருநெல்வேலியில் உள்ள காவல்துறை நெல்லை சரக தலைவர் (DIG) ஆகியோரிடமும் இது சம்பந்தமான மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காயல்பட்டினம் நகரில் கடந்த சில மாதங்களாக பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. காலியாக உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட்டு/திருட்டு முயற்சி; வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே இரவு நேரங்களில் திருட்டு/திருட்டு முயற்சி; அதிகாலை நேரங்களில் வெளியில் வேலை காரணமாக செல்லும் பொது மக்களை – தாக்கி, வழிப்பறி / வழிப்பறி முயற்சி; தெரு வியாபாரம் என்ற பெயரில் திருட்டு/கடத்தல் முயற்சி என பல்வேறு சம்பவங்கள், கடந்த சில மாதங்களாக நகரில் நடந்துள்ளன.
இவ்வாறு - இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளததற்கான காரணம் - சமீப காலங்களாக, நகரில் அதிகரித்துள்ள, இப்பகுதியை சாராத, வெளி மாவட்ட / வெளி மாநில நபர்களின் குடியமர்த்தமும், நடமாட்டமும் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதனை ஊர்ஜிதம் செய்யும் விதத்திலும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
பல நூற்றாண்டுகளாக - அமைதி பூங்கா என்றும், குற்றங்கள் இங்கு நடப்பது மிகவும் அரிது என்றும், காவல் நிலையம் இல்லாத ஊர் என்றும் பெயர் பெற்றுள்ள காயல்பட்டினம் நகரில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பது, அனைத்து மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்களை குறைப்பதற்காக பொது மக்களும் - தங்கள் இல்லங்களில் CCTV கேமராக்கள் பொறுத்த துவங்கியுள்ளார்கள். CCTV கேமராக்கள் என்பது அனைத்து தரப்பு மக்களாலும், நிறுவக்கூடிய விஷயம் இல்லை. மேலும் பொது இடங்களில் இன்னும் முழுமையாக CCTV கேமராக்கள் நிறுவும் பணி நிறைவாகவில்லை.
எனவே - இது போன்ற சம்பவங்களை தடுத்திட, தங்களிடம் கீழ்காணும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்.
(1) காயல்பட்டினம் பகுதியில் - காவல்துறை ரோந்து பணிகளை அதிகரிக்கவும். குறிப்பாக - இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்கவும்
(2) பொது மக்கள் / பொது நல அமைப்புகள் ஒத்துழைப்போடு HOME GUARDS எண்ணிக்கையையும் நகரில் அதிகரிக்கவும்
(3) வெளிமாவட்டம் / வெளி மாநிலம் பகுதிகளில் இருந்து நகரில் குடியேறும் நபர்கள் குறித்த கண்காணிப்பை, பொது மக்கள் / பொது நல அமைப்புகள் / வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைப்போடு அதிகரிக்கவும்; பெரிய நகரங்களில் உள்ளது போல் - வாடகை வீடுகளில் குடியமர்வோர் பட்டியலை (TENANTS INFORMATION) பராமரிக்க நடவடிக்கை எடுக்கவும்
இந்த நடவடிக்கைகள் மூலம் - நகரில் தற்போது நிலவும் அச்ச உணர்வு ஓரளவு களையப்பட்டு, பாதுகாப்பு உணர்வு மீண்டும் திரும்பும். எனவே - இது சம்பந்தமான துரித நடவடிக்கையை மேற்கொள்ளும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 9, 2018; 8:00 pm]
[#NEPR/2018020902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|