காயல்பட்டினம் கடற்கரையில் மீன்பிடி தளம் அமைத்திட மீன் வளத்துறை அனுமதியும் பெறவில்லை; விண்ணப்பிக்கவுமில்லை. இது தொடர்பாக “நடப்பது என்ன?” தொடர்ந்துள்ள வழக்கின் மீது பசுமைத் தீர்ப்பாயம் உரிய நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நிலை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் - இத்திட்டத்தின் ஓர் அங்கமாக - கான்க்ரீட் சாலை, தடை செய்யப்பட்டுள்ள உயர் அலை எல்லை (HTL) - குறைந்த அலை எல்லை (LTL) பகுதிகளுக்கு இடையில் (INTER-TIDAL ZONE) போடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இடத்தில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிமீறி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் - ஆகஸ்ட் 11 அன்று வழக்கு தொடர்ந்திருந்தார். நடப்பது என்ன? சார்பாக வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் நேஹா மிரியம் குரியன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது விபரங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி - புதிதாக எவ்வித பணிகளையும் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை (STATUS QUO) வழங்கினார். மேலும் - மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து (STATUS REPORT) - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது - அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
அவ்வழக்கு மீண்டும் செப்டம்பர் 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருமதி யாஸ்மீன் அலி - செப்டம்பர் 19 அன்று, சிங்கித்துறை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். அதனை தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, நவம்பர் 20 தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நவம்பர் 20 அன்று விசாரணைக்கு, நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னர் வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் - கூடுதல் கால அவகாசம் கோரினார். ஆய்வு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும், அறிக்கை தாக்கல் செய்யாமல் ஏன் கூடுதல் கால அவகாசம் கேட்கிறீர்கள் என நீதிபதி வினவினார். அடுத்த விசாரணைக்கு முன்னர் கண்டிப்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறி, வழக்கினை டிசம்பர் 8 தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் ஒத்திவைத்தார்.
நவம்பர் 20 அன்று - மனுதாரரான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் சார்பில் - கூடுதல் ஆவணங்கள், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு மீண்டும் டிசம்பர் 8 அன்று - பதிவாளர் (REGISTRAR) நீதிமன்றத்தில் பதிவாளர் திருமதி மீனா சதீஷ் முன்னர் வந்தது. அப்போது - மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக திருமதி ஈ.சரஸ்வதி - வக்காலத்து தாக்கல் செய்தார். இதர எதிர்மனுதாரர்கள் - தங்கள் பதிலை தாக்கல் செய்யாததால், மீண்டும் இவ்வழக்கு - டிசம்பர் 21 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டிசம்பர் 21 அன்று பதிவாளர் முன்பு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் வழக்கறிஞர் தவிர்த்து எதிர்மனுதாரர்கள் யாரும் ஆஜராகாததால் - மீண்டும் இவ்வழக்கு ஜனவரி 19 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இரு நீதிபதிகளும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் - வழக்குகள் பதிவாளர் முன்பே விசாரணைக்கு தற்போது வருகின்றன. ஜனவரி 19 அன்று இவ்வழக்கு மீண்டும், பதிவாளர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் - எதிர்மனுதாரர்கள் யாரும் ஆஜராகாததால், வழக்கு - பிப்ரவரி 16 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே - மாசு கட்டுப்பாட்டுவாரியத்தின் மாவட்ட செயற்பொறியாளர் சார்பில், சென்னையில் உள்ள இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் (JOINT CHIEF ENVIRONMENTAL ENGINEER) ஆர்.கண்ணன் - நிலை அறிக்கை (STATUS REPORT) ஒன்றை, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் பதிவு செய்துள்ள பதிலின் சாராம்சம் வருமாறு:
திரு பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனு - சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில கடலோரம் மேலாண்மை குழுமத்தின் செயலராலும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனராலும், ஜூன் 16 அன்று - மாசு கட்டுப்பாட்டுவாரியத்தின் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஜூலை 5 அன்று - மீன்வளத்துறையின் துணை இயக்குனர் (தூதுகுக்குடி மாவட்டம்) அவர்களுக்கு, பணிகளை உடனடியாக நிறுத்த - மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய துணை இயக்குனர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கடிதம் - மீன்வளத்துறையின் துணை செயற்பொறியாளரின் அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் - அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் பெறப்படவில்லை.
அதனை தொடர்ந்து - செப்டம்பர் 19 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள், நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர். பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இயக்கப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது அப்போது காண முடிந்தது.
அதனை தொடர்ந்து - அக்டோபர் 23 அன்று, பணிகளை உடனடியாக நிறுத்தவும், கடற்கரை பகுதி மேலாண்மை குழுமத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்க கோரியும் - தூத்துக்குடி மாவட்டம் மீன்வளத்துறையின் இணை இயக்குனருக்கு - கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் - இதுவரை, எந்த விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே - மேலே தெரிவிக்கப்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, இது சம்பந்தமான தகுந்த ஆணைகளை - பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 26, 2018; 2:30 pm]
[#NEPR/2018012604]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|