காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சொந்தக் கட்டிடத்தில் அமைக்கப்படுவதற்கான நிதியொதுக்கீடு செய்திட ஆவன செய்யப்படும் என – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். அத்துறை சார் இதர அதிகாரிகளுடனும் “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன. அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் அன்பளிப்பாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.
செப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.
இருப்பினும் - 2013 ஆம் ஆண்டில், காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை தணிக்கைத்துறை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.
தணிக்கை ஆட்சேபனையை (AUDIT OBJECTION) நீக்க - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
கடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ள நிலையில், கோமான் மொட்டையார் ஜமாஅத் அன்பளிப்பாக வழங்கியுள்ள 50 சென்ட் நிலத்தில், நவீன, அனைத்து வசதிகளையும் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட உடனடியாக நிதி ஒதுக்கிட கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை திரு என்.வெங்கடேஷ் IAS இடம் - ஜனவரி 22 (திங்கள்) அன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, அதனை தொடர்ந்து – கடந்த ஜனவரி 25 அன்று, சுகாதாரத்துறையின் அரசு முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களை - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சென்னையில் நேரில் சந்தித்தனர்.
அப்போது - தணிக்கை ஆட்சேபனை நீக்கப்பட்ட விபரம், அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் - விரைவில், காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திட நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக, துறை ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு கண்டிப்பாக ஆவனம் செய்வதாகவும், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS - நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - National Health Mission (NHM) திட்ட இயக்குனரிடமும் (MISSION DIRECTOR), Directorate of Public Health & Preventive Medicine (DPH) துறையின் இயக்குனரிடமும் - இது தொடர்பான மனுக்கள் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 25, 2018; 11:00 pm]
[#NEPR/2018012501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|