மாணவ-மாணவியர் நலன் கருதி, காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களுக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2017 - 2018 கல்வியாண்டு நிறைவுற்று, 2018 - 2019 கல்வியாண்டு துவங்கவுள்ள சூழலில், மாணவ - மாணவியர் நலனை கருத்தில் கொண்டு, நகர பள்ளிக்கூடங்களுக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக கீழ்காணும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
(1) 2017 - 2018 கல்வியாண்டின் கோடை விடுமுறை தினங்களில், மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி என்ற அடிப்படையில் வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஒரு முழு ஆண்டு, கல்விக்காக தங்கள் நேரங்களை ஒதுக்கிய மாணவ - மாணவியருக்கு, புதிய கல்வியாண்டை எதிர்கொள்ள - கோடை விடுமுறை மிகவும் அவசியம் ஆகும்.
(2) 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 2010 இல் இருந்து அமலுக்கு வந்துள்ள The Right of Children to Free and Compulsory Education Act, 2009 என்ற சட்டத்தின் படி, அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த குடும்பங்களை சார்ந்த மாணவ - மாணவியருக்கு இலவச கல்வி வழங்கப்படவேண்டும். அந்த மாணவ - மாணவியருக்கான கல்வி கட்டணத்தை, பள்ளிக்கூடங்களுக்கு - அரசு வழங்கும்.
2018 - 2019 கல்வியாண்டில் புதிய மாணவர்கள் சேர்க்கையின் போது - நகர பள்ளிக்கூடங்கள், வெளிப்படையான முறையில் - தங்கள் பள்ளிக்கூடங்களில் உள்ள RTE சட்டத்தின்படியான இடங்கள் விபரத்தை பொது மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தும் படி கேட்டுக்கொள்கிறோம்.
(3) 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசு - TN Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டத்தினை நிறைவேற்றியது. அதன்படி - ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு (Private Schools Fee Determination Committee), மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்கள் வசூல் செய்யும் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்யும். அந்த தொகைக்கு மேல் - சட்டப்படி எந்த கட்டணமும் கோரக்கூடாது.
2018 - 2019 கல்வியாண்டில், நகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள், ஒவ்வொரு வகுப்புக்கும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டண விபரங்களை வெளிப்படையாக வெளியிட கேட்டுக்கொள்கிறோம். மேலும் - அந்த கட்டணங்களுக்கு கூடுதலாக மாணவ - மாணவியரிடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
(4) அரசு பொது தேர்வுகளை கருத்தில் கொண்டு, முந்தைய ஆண்டுகளிலேயே - அரசு பொது தேர்வு வகுப்புக்கான பயிற்சி வழங்கப்படும் வழக்கம் பல பள்ளிக்கூடங்களில் உள்ளது. உதாரணமாக - 9வது வகுப்பு மாணவர்களுக்கு, 10வது வகுப்பு பாடங்கள் எடுக்கப்படுகிறது. 11 வது வகுப்பு மாணவர்களுக்கு 12 வது வகுப்பு பாடங்கள் எடுக்கப்படுகிறது.
தேர்வு முடிவுகளை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் இது போன்ற முடிவால், அடிப்படை வகுப்புகளை மாணவர்கள் இழக்கும் சூழல் எழுகிறது. இதனால் - கல்லூரி படிப்புக்கு தயாராகும் மாணவர்கள், பேரிழப்புக்கு ஆளாகிறார்கள். இப்பிரச்சனையை - NEET தேர்வுக்கு தயாரான மாணவர்கள், 11 வது வகுப்பு பாடங்கள் அவர்களுக்கு எடுக்கப்படாததால் சந்தித்துள்ளார்கள்.
எனவே - மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நகர பள்ளிக்கூடங்கள், அந்தந்த ஆண்டுகளுக்கான பாடங்களை முழுமையாக அந்தந்த ஆண்டில் நடத்திடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 14, 2018; 10:00 am]
[#NEPR/2018041401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|