பொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய – காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) என்ற சமூக சேவகருக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் 14.04.2018. சனிக்கிழமையன்று சொற்பொழிவு நிறைவுற்றதும், ‘நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், சமூக சேவகரின் 65 ஆண்டுகால பொதுச் சேவையை நினைவுகூர்ந்து அறிக்கை வாசிக்கப்பட்டது.
பின்னர், நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் அவருக்கு பணமுடிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி பல்வேறு குடும்பத்தினர் சார்பிலும் பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்தப்பட்டது. நிறைவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவருடன் கைலாகு செய்து, பாராட்டிப் பிரார்த்தித்தனர்.
பாராட்டு விழா நிறைவுற்றதும், ஹாமிதிய்யா மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்றனர். இடையில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரும், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) அவர்கள் நினைவாகவும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டப்பட்டார்.
அவர் பல்லாண்டு காலம் தலைமை தாங்கிய – இன்றளவும் சேவையாற்றி வருகிற – இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரிணைந்து அவருக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்றனர்.
பின்னர், பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, நஹ்வியப்பா நற்பணி மன்ற துணைத் தலைவர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில், அதன் நிர்வாகிகளான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உள்ளிட்ட குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.
85 வயது நிரம்பிய – 65 ஆண்டு கால சமூக சேவகர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களைப் பாராட்டி, பாராட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட அறிக்கை:-
85 வயது இளைஞரின் மகத்தான சேவைகளுக்கு பாராட்டும்,நிம்மதியான வாழ்வுக்கு துஆ வேண்டி...................
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
காயல்பட்டினம், சொளுக்கார் தெருவைச்சார்ந்த மரியாதைக்குரிய S.E.முஹம்மது அலி சாஹிப் அவர்கள். இவர் கிழக்குப்பகுதி மக்களால் அன்புடன் தலைவர் மற்றும் T.M மாமா என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
இவர் வயதில் 85 ஆனாலும் சேவையில் 25 வயதுதான்! மாஷாஅல்லாஹ்!
கடந்த 65 வருடங்களுக்கு மேலாக பொதுப்பணிகளில் தன்னலம் கருதாது பொதுநலத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
குருவித்துறை மஹல்லாவில் ஏற்பட்ட சோதனைக்குரிய காலங்களில் சிறந்த முறையில் செயல்பட்டு தீர்வு கண்டவர்.அதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டவர்களுள் இவருடைய பங்கு மகத்தானது.
91 ஆண்டு தொண்மையான இந்த மஜ்லிஸில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் வகிக்காமல், அதற்காக ஆசையும் படாமல், பணி செய்வதற்கு பதவிகள் அவசியம் இல்லை என்ற கொள்கை கொண்டு செயல்பட்டவர். சுமார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஸபையின் மானேஜர் என்ற பொறுப்பில் பொதுக்குழுக் கூட்டத்தால் பலரின் வலியுறுத்தலின் பேரில் அங்கம் வகித்தார்கள்.
இவரின் சேவைக் கடலிலிருந்து சில துளிகள்...
>>> எமது மஹல்லாவின் அனைத்து வீடுகளிலும் நடக்கும் எந்த நல்ல நிகழ்வுகளானாலும், எந்த துக்க நிகழ்வுகளானாலும் - அவை இவரின் அறிவுத்தலின் படிதான் நடந்தேறும்...
>>> குருவித்துறைப் பள்ளியின் ரமழான் கால அனைத்து நிகழ்வுகளையும் – யாரும் அழைக்காமலேயே – தாமாக முன்வந்து முன்னின்று இறுதி வரை நடத்தல்...
>>> ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆஃகிர் மாதங்களில் நடைபெறும் மவ்லித் நிகழ்ச்சிகளில் நேர்ச்சை வினியோகத்தை முறைப்படுத்துதல்...
>>> இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தை உருவாக்கிய முதன்மையானவர்களுள் இவரும் ஒருவர். சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களின் பேராதரவோடு சிறப்பாக நடத்த வழிவகை செய்பவர்...
>>> மத்ரஸா ஹாமிதிய்யாவின் மகத்தான விழாக்கள் அனைத்தும் செம்மையாக நடந்தேற முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்...
>>> தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் விழாக்கள் ஆரம்பம் செய்வதற்கு முன்பே தன் பங்களிப்பை கொடுப்பதுடன், விழாக்கள் சிறப்பாக முடிவடைந்த பின்பும் தொடர்ந்து பங்காற்றுபவர்.
>>> “பொது நிறுவனங்கள் சட்டத்தின் படிதான் நடக்கும்; ஆனால், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் டீ.எம். அவர்களின் சத்தத்தில்தான் நடக்கும்” என்று, மஹல்லாவின் மூத்தவர்களால் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.
>>> கிழக்குப் பகுதியில் தம் வீட்டில் பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகளும் கூட இவரின் சொல்லுக்குக் கட்டுப்படுவர்.
>>> பொது நிறுவனங்களில் இவர் பொறுப்பெடுத்து கடைசி வரை கட்டிக்காத்து செயல்படும் விதம், தன்வீட்டின் நிகழ்வுகள் போல் மிகவும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப்பாதுகாத்து வரும் முறை – அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்...
>>> இப்படியொரு பாராட்டு நிகழ்வு என்றாவது தன் வாழ்நாளில் நடைபெறும் என்று நினைத்தறியாதவர்...
மொத்தத்தில் இவர் பொதுச் சேவையில் கிழக்குப் பகுதியின் பொக்கிஷங்களுள் ஒருவர்.
இவை தனிமனிதப் புகழ்ச்சிக்காக எடுத்துக்கூறப்படும் வெற்றுச் சொற்கள் அல்ல! மாறாக அவரின் தியாகத்தைப் போற்றவும், இதைப் போல் நாமும் பொதுச் சேவைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலுக்காகவுமே கூறப்படுகிறது.
இவரது தன்னமற்ற சேவைகளுக்கு இப்பொழுது நாம் வழங்கும் பாராட்டோ அல்லது பணமுடிப்போ நிச்சயம் ஈடாகாது.
எல்லாம்வல்ல அல்லாஹ், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ,நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்...
தாங்களும் இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், ஈருலக நிம்மதிக்கும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.
|