அரசின் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடக் கோரி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த செய்தியறிக்கை:-
DCW தொழிற்சாலை, காயல்பட்டினம் நகரில் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக, இத்தொழிற்சாலை வெளிப்படுத்திவரும் மாசுவால் - சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் - புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸ்டிக் சோடா என்ற பொருளை உப்பில் இருந்து தயாரிக்க துவக்கப்பட்ட இந்த தொழிற்சாலை தற்போது பல்வேறு வேதியல் பொருட்களை தயாரிக்கிறது. இருப்பினும் - இந்த தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகள் இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி காலாவிதியாகிவிட்டது. அதன் பிறகும் இத்தொழிற்சாலை இயங்கிவருகிறது.
PVC என்ற பொருளை தயாரிக்க - தூத்துக்குடி துறைமுகம் வழியாக VCM என்ற பொருளை இந்நிறுவனம் இறக்குமதி செய்கிறது. செப்டம்பர் 2016 ஆம் ஆண்டே, தூத்துக்குடி துறைமுகத்தில் VCM யை சேமித்து வைக்க வழங்கப்பட்ட அனுமதி முடிந்துவிட்டது. இருப்பினும் அந்நிறுவனம், தூத்துக்குடி துறைமுகம் வழியாக - அப்பொருளை இறக்குமதி செய்து, சிவப்பு நிற லாரிகள் மூலம் - நெடுஞ்சாலை வழியாக, தொழிற்சாலைக்கு அத்திரவத்தை கொண்டு செல்கிறது.
காஸ்டிக் சோடா பிரிவுக்கு 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு செயலாற்ற எந்த அனுமதியும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கவில்லை. இருப்பினும் - அனுமதியே இல்லாமல், இப்பிரிவும் செயல்புரிந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் இதர பிரிவுகளான PVC, SIOPP, COGEN POWER PLANT, CAPTIVE POWER PLANT ஆகியவற்றுக்கான அனுமதியும் சில தினங்களுக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. இருப்பினும் அப்பிரிவுகளும் தொடர்ந்து செயல்புரிந்து வருகின்றன.
மேலும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனைகளான - சென்னை IIT மூலம் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் மற்றும் மதிப்பிற்குரிய ஒரு மருத்துவ அமைப்பு மூலம் உடல்நல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற விதிமுறையும் செயல்படுத்தப்படாமலேயே, PVC மற்றும் CPVC பிரிவுகள் இயங்க - அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு முறைக்கேடான வழியில் வழங்கப்பட்ட அனுமதியும் சில தினங்களுக்கு முன்பு காலாவதியாகிவிட்டது.
எனவே - சுற்றுச்சூழலுக்கு பல்வேறு வகைகளில் கேடு விளைவித்துள்ள DCW தொழிற்சாலையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம் மனு வழங்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி - தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆகியோரிடமும் - இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 16, 2018; 7:00 pm]
[#NEPR/2018041605]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|