தூத்துக்குடி துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து.முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
1958 ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினத்தில் இயங்கிவரும் DCW தொழிற்சாலையினால் - பல்வேறு மாசு பிரச்சனைகள், சுற்றுவட்டார பகுதிகளில் நிகழ்ந்து வருகின்றன. அதன் விளைவாக - புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழிற்சாலையில் உற்பத்திசெய்யப்படும் பல்வேறு வேதியல் பொருட்களில் முக்கியமானது PVC. இதற்கு தேவையான மூலப்பொருளான VCM இரசாயனத்தை, DCW நிறுவனம் - தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்கிறது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இரசாயனம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் (TRANSIT TERMINAL) சேமித்து வைக்கப்பட்டு, அவ்வப்போது - சிகப்பு நிற லாரிகள் மூலம், பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் நெடுஞ்சாலை வழியாக, பாதுகாப்பற்ற வகையில் - தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து முனையத்திற்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, செப்டம்பர் 30, 2016 அன்று காலாவதியாகிவிட்டது. இருப்பினும் - தொடர்ந்து, அந்த முனையத்தை DCW தொழிற்சாலை, பயன்படுத்தி வருகிறது.
அனுமதி இல்லாமல் இயங்கும் VCM போக்குவரத்து முனையத்தை உடனடியாக மூடிட கோரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அறக்கட்டளையின் தலைவருக்கு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 17, 2018; 9:00 am]
[#NEPR/2018041701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|