காயல்பட்டினத்தில் செயல்பாடற்றுக் கிடந்தமையால் அரசால் இடித்தகற்றப்பட்ட தைக்கா பள்ளி பழைய கட்டிடம் இருந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி, தூத்துககுடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தைக்கா பள்ளி என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளி, புதிய வளாகத்தில் செயல்பட துவங்கியதை அடுத்து - அதன் பழைய கட்டிடம், பராமரிப்பற்று, பாதி இடிந்த நிலையில், பல்வேறு சமூக சீர்கேடுகள் அரங்கேறும் இடமாக மாறியிருந்தது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமத்தின் பெண்கள் பிரிவு எடுத்த தொடர் முயற்சியின் பயனாக, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS - பழைய வளாகத்தை இடித்து தரைமட்டமாக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார். அந்த பாழடைந்த கட்டிடமும் சில மாதங்களுக்கு முன்பு தரைமட்டமாக்கப்பட்டது.
தற்போது காலிமனையாக உள்ள அவ்விடத்தில் - ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் கொண்டு வரலாம் என அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இதே மனு - இன்று பள்ளிக்கல்வித்துறையின் அரசு முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (திருச்செந்தூர்) ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 16, 2018; 1:30 pm]
[#NEPR/2018041602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|