கஷ்மீர் மாநிலத்தில், கிராமப்புரத்தில் குதிரை மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஆஸிஃபா, சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது நாடறிந்த செய்தி.
இந்நிகழ்வைக் கண்டித்தும், இதில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 15.04.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் எச்.பீரப்பா தலைமையேற்க, நகரின் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, தமுமுக / மமக மாவட்டத் தலைவர் எஸ்.ஆஸாத் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பேச்சாளர்களும் கண்டன உரையாற்றினர்.
பாலியல் வன்முறை நிகழ்வைக் கண்டித்தும், அதில் ஈடுபட்டோர் மீது தயவுதாட்சண்யமின்றி முறையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இதன்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமுமுக / மமக கட்சியைச் சேர்ந்தோர், காயல்பட்டினத்தின் இதர அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தோர், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|