ஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு! பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை!! – மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் அலகு 1 பிரிவைத் தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பம் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அச்ச உணர்வூட்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்பினரால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் இக்கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி. கருப்பணன் அவர்களின் 31.03.2018 நாளிட்ட அறிக்கையில், “பொதுமக்களால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகார்கள் கருத்தில் கொள்ளப்பட்டு தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது எனவும், விரைவில் இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 10.04.2018 நாளிட்ட செய்தி குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1-ஐ 31.03.2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது எனவும், 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமானது தனது 09.04.2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் ஸ்டெர்லைட் குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவ்வாறு தமிழக அரசால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் போராட்டக்காரர்களின் அமைதிப் போராட்டமானது சில சமூக விரோதிகளால் திசை திருப்பப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சில விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
போராட்டக்காரர்களின் கோரிக்கையினை அரசு தீவிரமாக பரிசீலித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுவதையும் போராட்டக்காரர்கள் கைவிட்டு தங்களது கோரிக்கைகளை அரசிடம் சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் தெரிவித்தும், உரிய அமைதி பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காணலாம்.
அரசும்; தொடர்ந்து கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் அதற்கு மாறாக பொதுமக்களுக்கு அச்ச உணர்வை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross