காயல்பட்டினத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் அறிவிக்கப்பட்டும் இதுவரை துவக்கப்படாதிருப்பதைச் சுட்டிக்காட்டி, உடனடியாகத் துவக்கிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவ துறையில் பயில NEET தேர்வு - கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு இத்தேர்வுகளை சந்திக்க சிறப்பு பயிற்சி அளிக்கும் நோக்கில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் துவக்கப்படும் என கடந்த அக்டோபர் மாதம் - தமிழக அரசு அறிவித்தது.
தூத்துக்குடி மாவட்ட மையங்கள் அடங்கிய பட்டியலில் காயல்பட்டினம் இடம்பெறாததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் அரசு முதன்மை செயலரை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் சந்தித்து, தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஊரான காயல்பட்டினத்தில் பயிற்சி மையம் அமைக்கப்படாதது ஏற்புடையதல்ல என தெரிவித்தனர்.
நடப்பது என்ன? குழும கோரிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் காயல்பட்டினம் சேர்க்கப்பட்டது. இருப்பினும் - இன்னும் NEET தேர்வு நடைபெற மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில், காயல்பட்டினத்தில் இந்த மையம் இதுவரை செயல்பட துவங்கவில்லை.
இது குறித்து விசாரித்ததில், காயல்பட்டினம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மையத்தில் பயில பதிவு செய்திருந்த மாணவர்கள் - அருகாமையில் உள்ள மையங்களில் சேர்ந்து பயில அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
NEET தேர்வுக்கான பயிற்சி மையத்தை இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக துவங்கிட கோரி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேசன் IAS இடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இதே மனு - சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் அரசு முதன்மை செயலர் மற்றும் மாவட்ட தலைமை கல்வி அலுவலரிடமும் - சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 16, 2018; 12:30 pm]
[#NEPR/2018041601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|