காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் - சுமார் 46 ஆண்டுகளாக, நகரில் உருவாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக விதிமுறைகளை மீறி இங்கு குப்பை கொட்டப்பட்டு வருவதால், நிலத்து நீர் மாசுபட்டுள்ளது. மேலும் - சில சமூக விரோதிகளால், அங்கு கொட்டப்படும் குப்பை, அவ்வப்போது எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதியில் பாதிப்புகள் ஏற்படுகிறது.
குப்பையை எரிப்பது சட்டப்படி குற்றமாகும். இது குறித்து - காயல்பட்டினம் நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகளிடம், செப்டம்பர் 2016 இல், மனு வழங்கப்பட்டது. அந்த மனு மீது நடவடிக்கை எடுத்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இவ்வாறு குப்பையை தீமூட்டி எரிப்பவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனை அடுத்து - சில மாதங்களாக, குப்பைகளை எரிக்கும் சம்பவங்கள் வெகுவாக குறைந்திருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கத்தில், மீண்டும் சில விஷமிகள் - பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்ததை அடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் நகராட்சி இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, ஆறுமுகநேரி காவல்நிலையத்தில், நடப்பது என்ன? குழுமம் சார்பாக புகார் பதிவு செய்யப்பட்டது.
அதனை அடுத்து, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக - நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையே உறுதி செய்து கீழ்க்காணும் பதிலும், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட மனுவிற்கு வழங்கப்பட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட பப்பரப்பள்ளியில் உரக்கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. அது சமயம், தீயணைப்பு வண்டி மற்றும் நகராட்சியின் குடிநீர் வண்டி மூலம் அணைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் தினமும் பாதுகாப்பு பணிக்கென தனியாக ஒரு நபர் பகல் மற்றும் இரவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி, காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் வழங்கி சரியாக ஓர் ஆண்டு கழித்து, மீண்டும் பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரிக்கும் செயல் நேற்று (ஏப்ரல் 15) நடந்துள்ளது. இதனால் - அருகாமை பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டு, மாசு பிரச்சனை உருவாகியது.
இது சில விஷமிகளின் திட்டமிட்ட செயலாக தெரிகிறது. எனவே இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இத்தீமூட்டு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி - மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 16, 2018; 3:00 pm]
[#NEPR/2018041603]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|