காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் அபூர்வ துஆ, கோடை விடுமுறை ஆகிய நாட்களில் கடற்கரையில் பெரும் மக்கள் திரள் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு, கடற்கரையிலுள்ள பொது கழிப்பறையைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பயனாக, கடற்கரை ஆண்கள் – பெண்கள் பகுதிகளிலுள்ள பொதுக் கழிப்பறைகள் இரவோடு இரவாக துப்புரவு செய்யப்பட்டு, ஏப்ரல் 17ஆம் நாள் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையில் பல லட்ச ரூபாய் பொருட்செலவில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இருப்பினும் மின் இணைப்புகள் வழங்கப்படாததால், அவை பயன்பாட்டுக்கு வரவில்லை என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மின்கம்பங்கள் நட்டப்படவேண்டியுள்ளது என்றும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக - மின்வாரியத்திடம் நடப்பது என்ன? குழுமம் விசாரித்ததது. அப்பகுதிக்கு தேவையான மின்கம்பம் - சில வாரங்களுக்கு முன்பு நட்டப்பட்டுவிட்டதாக, மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புகாரி ஷரீஃப் வைபவங்கள், கோடை விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் கடற்கரையை பயன்படுத்துவர் என்பதை கருத்தில் கொண்டு, கடற்கரை கழிப்பிடங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டி - நகராட்சி ஆணையரிடம் இன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, அக்கழிப்பறைகள் இரவோடிரவாக சுத்தம் செய்யப்பட்டு, 17.04.2018. செவ்வாய்க்கிழமையன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
விரைவாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோருக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 17, 2018; 12:00 pm]
[#NEPR/2018041702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|