காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக, இன்று ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் நடைபெற்ற - நகரின் அனைத்து ஜமாஅத்துகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில், “காயல்பட்டினம் போதைப் பொருள் ஒழிப்புக் குழு” என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 272 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள விபர அறிக்கை:-
காயல்பட்டினத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த கோரிக்கை:
காயல்பட்டினத்தில் போதைப் பொருளைத் தடை செய்ய தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கடந்த 06.08.2018. திங்கட்கிழமையன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
சமூக ஆர்வலர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்:
போதைப் பொருள் நடமாட்டத்திற்கெதிராக அரசிடம் முறையிடும்போதெல்லாம் காவல்துறை கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவிட்டு அமைதிகாத்து விடுவதாகக் கூறி, நிரந்தர நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா தெருவிலுள்ள – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கட்டிட வளாகத்தில், 10.08.2018. வெள்ளிக்கிழமையன்று 10.30 மணியளவில் நகரின் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் கூட்டம்:
அதில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களின் நிறைவில், 11.08.2018. சனிக்கிழமையன்று (இன்று) நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களின் அங்கத்தினர் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டத்தை, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று 10.30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, நகரப் பிரமுகர்களான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, லேண்ட்மார்க் ராவன்னா அபுல் ஹஸன், எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எம்.எஸ்.அபூபக்கர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, எஸ்.டி.பீ.ஐ. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷம்சுத்தீன், தமுமுக சார்பில் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், லேண்ட் முஹம்மத் முஹ்யித்தீன், காவாலங்கா அமைப்பின் செயலாளர் பி.எம்.ரஃபீக், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு – மெகா சார்பில் எம்.கே.ஜஃபருல்லாஹ், நகர்நல மன்றம் சமூக ஊடகக் குழுமம் சார்பில் இ.எம்.சாமி, சாளை ஷேக் ஸலீம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மீரான், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவர் நஜ்முத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னீர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹஸன் முகைதீன், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், திமுக நகர பொறுப்பாளர் கே.எஸ்.முத்து முஹம்மத், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எஸ்.ஜமால், கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஹுஸைன் ஹல்லாஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பீ.எஸ்.அப்துல் காதிர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
சட்டமன்ற உறுப்பினர் சிறப்புரை:
தொடர்ந்து, சிறப்புரையாற்றிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்தின் நோக்கம், காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக இதுவரை நகர பொதுநல அமைப்புகளும், தன்னார்வலர்களும் எடுத்த தொடர் முயற்சிகள் – முன்வைத்த கோரிக்கைகள், சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆறு மாதங்களாக தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிப் பேசினார்.
இத்தனை தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், காவல்துறை நடவடிக்கை அவ்வப்போது வெறும் கண்துடைப்புக்குச் செய்வதாகவே உள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாகவும், நிரந்தரமாகவும் தடுத்து நிறுத்தி, இளைய சமுதாயத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், அந்த நோக்கத்தை முழுமையாக அடையும் வரை – எடுத்துள்ள இம்முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து கூட்டத் தீர்மானத்தை அவர் முன்மொழிய – அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை ஏற்றுக்கொண்டனர்.
தீர்மானம்:
வரலாற்றுச் சிறப்பிற்குரிய காயல்பட்டினத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாகவும், நிரந்தரமாகவும் ஒழித்திட தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு தமிழக காவல்துறையை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
காயல்பட்டினத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கண்டறிதல், அது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்குக் கோரிக்கைகளை வலியுறுத்தல், நகர பள்ளிக்கூடங்கள் – மத்ரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உட்பட நகரின் தேவையான பகுதிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு பரப்புரை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, பின்வருமாறு குழுவினர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
ஆலோசனைக் குழு:
(01) எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ (ஐக்கியப் பேரவை)
(02) லேண்ட்மார்க் ராவன்னா அபுல் ஹஸன்
(03) எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (அதிமுக)
(04) கே.எஸ்.முத்து முஹம்மத் (திமுக)
(05) காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (மதிமுக)
(06) முஸ்தஃபா கமால் (காங்கிரஸ்)
(07) பீ.எஸ்.ஷேக் அப்துல் காதிர் (அமமுக)
(08) சாளை ஸலீம்
(09) பன்னீர் செல்வம் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்)
(10) இ.எம்.சாமி (நகர்நல மன்றம் குழுமம்)
(11) ஹஸன் முகைதீன் (இந்திய கம்யூனிஸ்ட்)
(12) எஸ்.ஏ.சி.இஸ்மாஈல் ஸூஃபீ
(13) ஏ.எஸ்.ஜமால் முஹம்மத்
(14) எல்.எஸ்.அன்வர் (அதிமுக)
(15) முஹம்மத் அலீ ஜின்னா (திமுக)
(16) எஸ்.என்.முஹம்மத் அலீ (வி-யுனைட்டெட் க்ளப்)
செயல்பாட்டுக் குழு:
(01) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (இ.யூ.முஸ்லிம் லீக்)
(02) எச்.ஷம்சுத்தீன் (எஸ்.டி.பீ.ஐ.)
(03) வங்காளம் உமர் அனஸ் (கற்புடையார் வட்டம்)
(04) சிக்கந்தர் (சித்தன் தெரு பகுதி)
(05) ஹஸன் (தமுமுக)
(06) எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் (காக்கும் கரங்கள்)
(07) எஸ்.மீரான் (நாம் தமிழர்)
(08) ஏ.ஜெ.சொளுக்கு (நகர்நல மன்றம் குழுமம்)
(09) எஸ்.கே.ஸாலிஹ் (இ.யூ.முஸ்லிம் லீக்)
(10) கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் (காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு)
(11) ஏ.டீ.ரியாஸ் (கொச்சியார் தெரு பகுதி)
(12) கஸ்ஸாலி மரைக்கார் (போதை ஒழிப்பு சங்கம்)
(13) எம்.எச்.அப்துல் வாஹித் (இ.யூ.முஸ்லிம் லீக்)
ஒருங்கிணைப்பாளர்:
சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
துணை ஒருங்கிணைப்பாளர்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
மேற்படி குழுக்களில் ஆலோசனைக் கூட்டம், 12.08.2018. ஞாயிற்றுக்கிழமை (நாளை) 19.00 மணிக்கு, துளிர் பள்ளி எதிரிலுள்ள ராவன்னா தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மொத்தம் 272 பேர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ & M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |