திராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 07.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல், சென்னை சி.ஐ.டீ. காலனியிலும், பின்னர் ராஜாஜி அரங்கிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தென்மாநிலங்களின் திரையுலகத்தினர், இலக்கியவாதிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு, நிறைவில் – அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய ஆவன செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இராணுவ வாகனத்தில் 16.00 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கிடையே சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அண்ணா சமாதிக்கு அருகில் 19.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி, காயல்பட்டினம் உட்பட தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியே சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்தமையால் இயல்பு வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்புகள் எதுவுமிருக்கவில்லை.
|