சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் மக்கள் மருந்தகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-
WAKF நிதியில் இருந்து மக்கள் மருந்தகத்திற்கு நிதியுதவி!
உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையில், நம் காயல் மாநகரில் மருத்துவ சேவையாற்றும் அமைப்பு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அறக்கட்டளையாகும்.
ஆங்கில மருந்துகளை - பொதுவான மருந்துக் கடைகளில் பெருந்தொகை கொடுத்தே வாங்க வேண்டிய இக்காலத்தில், அதை விடப் பன்மடங்கு குறைவாக - பொதுமக்கள் மிகவும் மலிவான விலையில் மருந்துகளைப் பெறும் வகையில் மத்திய அரசின் மானிய உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி, பிரதம மந்திரி “மக்கள் மருந்தகம் “ எனும் ஜெனெரிக் மருந்துக் கடை - ஷிஃபா அறக்கட்டளை மூலம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
“மக்கள் மருந்தகம்” இன்னும் சிறப்பாக செயல்படுத்த, காயல்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் பொருட்டு உலக காயல் நல மன்றம் மற்றும் தன்னார்வளர்களிடம் நிதி உதவிக் கேட்டு ஷிஃபா அறக்கட்டளை மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையினை சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் மன்றத்தில் முன்மொழிந்து அனைவரும் தங்கள் கருத்துகளைக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறுப்பினர்கள், “மக்கள் மருந்தகம்” பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப ஷிஃபா அறக்கட்டளை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துண்டுப் பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் தெருக்கள் தோறும் “மக்கள் மருந்தகம்” பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம், பெருநாள் போன்ற விழாக்காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் ஸ்டால் அமைத்தல் போன்ற ஆலோசனைகள் மன்ற செயற்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது, இந்த ஆலோசனைகள் ஷிஃபா அறக்கட்டளை நிர்வாகத்திடம் தெரிவிக்க ஆவன செய்வதாக சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் கூறினார்கள்.
இறுதியாக உறுப்பினர்கள் அனைவர்களின் முழு சம்மதத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் திட்டமான Women And Kids Fund (WAKF) மூலம் கடந்த பொதுக்குழுவில் கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து மக்கள் மருந்தகத்திற்கு ரூபாய் 25,000/- நிதியுதவி வழங்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA. |