காயல்பட்டினத்தில் போதைப் பொருளைத் தடை செய்ய தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் இன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரியுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சமீப காலத்தில் போதைப் பொருள் நடமாற்றம் அதிகரித்து வருவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ. மஹ்மூதுல் ஹஸன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., கவனத்திற்கு எடுத்து சென்றதை தொடர்ந்து அவர் கடந்த இரண்டு தினங்களாக காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளுக்கு முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து இன்று 07.08.2018 காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐ.பி.எஸ். ஆகியோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ. மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர். பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் எம். ஏ. முஹம்மது ஹஸன், தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்துல் கபூர் ஆகியோர் நேரில் சந்தித்து காயல்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் உடனடியாக ஈடுபட வேண்டுமென்பதை வலி யுறுத்தி மனு அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:-
காயல்பட்டினம் நகரம் பன்னூற்றாண்டு வரலாற்று சிறப்பும், பாரம்பறிய பெருமையும், சமய நல்லிணக்கம்- சகோதரத்துவம், நெறிசார்ந்த ஒழுக்க மாண்புகளை கொண்ட நகரமாகும்.
சமீப காலமாக சிலரின் திட்டமிட்ட சதியால் இளைஞர்களை, மாணவர்களை போதை பொருட்களுக்கு ஆள்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் கண்ணீர் சிந்தி என்னிடம் நேரில் தெரிவித்து வருகின்றனர். மேலும் காயல் பட்டினத்தில் வெளியூர் களிலிருந்து வருபவர்களால் திருட்டுச் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கு காயல் பட்டினத்திற்கென்று தனியாக கண்காணிப்பு படை உருவாக்கி கடும் நடவடிக்கை எடுத்திடு மாறு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
போதைப் பொருள் தடுப்பு- விழிப்புணர்வு பிரச்சாரம் காயல்பட்டினத்தில் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்பிரச்சாரத்தை தாங்கள் துவக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு அம்மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|