காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் அடங்கியிருக்கும் மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் கந்தூரி நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டு கந்தூரியை முன்னிட்டு, நகரளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) போட்டி, 28.07.2018. சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை, பெரிய நெசவுத் தெரு ஹாமிதிய்யா பெண்கள் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நெசவு ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.தாவூத் ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
இப்போட்டியில், நகரின் பல்வேறு மத்ரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 16 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுள்,
எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் ஆமிர்,
எஸ்.என்.அஹ்மத் அம்மார்,
எச்.எம்.முஹம்மத் ஃபஹீதுத்தீன்
ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர். அவர்களுக்கு, 1,500, 1,000, 750 ரூபாய் பரிசாகவும்,
நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்ற ஐ.நஜ்முத்தீன் ஹுனைஃப், எம்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் ஆறுதல் பரிசாகவும் அறிவிக்கப்பட்டது.
அன்றிரவு நடைபெறும் கந்தூரி விழாவின் நிறைவில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. போட்டியின் நிறைவில், கடமையாற்றிய நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், திருக்குர்ஆனை அழகுற ஓதுவதன் அவசியம் – முறைகள் குறித்து போட்டி நடுவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. போட்டி ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் இப்றாஹீம் தாரிக் செய்திருந்தார்.
|