சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்த அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 67-வது செயற்குழு கூட்டம் கடந்த 03.08.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் ஹம்ஜா அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்திதந்த சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். இந்தச் செயற்குழு கூட்டம் புனித ரமழான் விடுமுறைக்குப்பின் நடைபெறும் முதல் கூட்டம் என்றும், நடப்பாண்டின் பாதியைக் கடந்துவிட்ட நிலையில் நம் மன்றத்தின் அதிகப்படியான செயல்திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். மன்ற செயல்பாடுகள் அதீத வளர்ச்சி அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி மேலும் மிகவும் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதாக கூறினார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை பொருளாளர் சகோதரர் M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி அவர்கள் வாசித்தார்.
Kayal Schools Welfare Projects:
உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects கடந்த இரண்டு ஆண்டுகளாக எமது மன்றத்தின் மூலம் செயல்படுத்ட பட்டு வருகின்றது. நடப்பாண்டிற்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோதரர் ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு தேவைப்படும் நல உதவிகளைக் கேட்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது
மாத்தாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
எமது மன்றத்தின் மற்றுமொரு சிறப்பு திட்டமான, ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது, எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவுறும் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட பங்களிப்பாளர்கள் தேவைப்படுவதாகவும், இத்திட்டத்தில் தங்களின் பங்களிப்பை வழங்கிட ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஹம்ஜா, கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தமது கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
சகோதரர் ஹைதர் அலி, சகோதரர் சேக் தாவூத் இத்ரீஸ், சகோதரர் கூஸ் அபூபக்கர், சகோதரர் செய்யத் ஷைஃபுல்லாஹ் மற்றும் சகோதரர் அபூபக்கர் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாகச் சகோதரர் நுஸ்கீ அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவிலச் சகோதரர் சதக் ஸமீல் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA. |