காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த 04.08.2018. சனிக்கிழமையன்று நடைபெற்றது.
அதில் பேசிய காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் – அடுத்த சில நாட்களில் - தம் வீடுகளிலும், சுற்றுப் புறங்களிலும் கண்களில் படும் – மறுசுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் பொருட்களைப் பொறுப்புணர்வுடன் சேகரித்துக் கொண்டு வருவோருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, அப்பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களாக சேகரித்த – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. குளிர்பானப் புட்டிகள், தண்ணீர் புட்டிகள், மருந்துப் புட்டிகள் உள்ளிட்டவை அதில் அடக்கம்.
இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பி.செய்யித் அப்துல் காதர் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளார் எஸ்.பொன்வேல் ராஜ் சிறப்புரையாற்றினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மாணவர்களுக்கு உள்ள பொறுப்பை உணர்த்துவதற்காகவும், மறு சுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து பல்வேறு தேவைகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அவர்களைத் தூண்டும் நோக்குடனுமே - கடந்த நிகழ்ச்சியின்போது ஊக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி – தமது சுற்றுப்புறங்களிலிருந்து தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் சேகரித்துக் கொண்டு வந்திருந்த மாணவர்களைக் காயல்பட்டினம் நகராட்சி சார்பில் தான் மனதாரப் பாராட்டுவதாக அவர் தனதுரையில் கூறி, அவர்களுக்கு ஊக்கப் பரிசுகளையும் வழங்கினார். அவரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான வாவு எம்.எம்.உவைஸ், தலைமையாசிரியர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, சென்ட்ரல் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிறைவில், குவித்து வைக்கப்பட்டிருந்த – 20 கிலோ எடையளவிலான – மறுசுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் பொருட்களை காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சேகரித்து எடுத்துச் சென்றனர். அதற்கான விற்பனைத் தொகையாக 250 ரூபாய் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
|