காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள விபர அறிக்கை:-
காயல்பட்டினத்தில் போதைப் பொருளைத் தடை செய்ய தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கடந்த 06.08.2018. திங்கட்கிழமையன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா வைத்திருந்ததாகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் நடமாட்டத்திற்கெதிராக அரசிடம் முறையிடும்போதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகளைப் பெயரளவுக்கு எடுத்துவிட்டு, அமைதிகாத்து விடுவதாகக் கூறி, நிரந்தர நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா தெருவிலுள்ள – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கட்டிட வளாகத்தில், 10.08.2018. வெள்ளிக்கிழமையன்று 10.30 மணியளவில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தலைமை தாங்கினார். நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் நல்ல குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பெருவாரி இளைஞர்கள் அத்தீய பழக்கத்தில் சிக்கிச் சீரழிந்து வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இத்தீமையை நகரிலிருந்து முற்றிலும் ஒழித்திட – நகரின் பல்வேறு பொதுநல அமைப்புகள் தொடர்ந்து கோரி வருவதாகவும், காவல்துறை டிஜிபீ உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தான் இதுகுறித்துக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறிய அவர், எனினும் ஒவ்வொரு கோரிக்கைக்குப் பிறகும் காவல்துறை கண்துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு அமைதிகாத்துவிடுவதாகவும், இதனால் நகரில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்குப் பகரமாக மிகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், கடந்த 06.08.2018. திங்கட்கிழமையன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட – காயல்பட்டினம் நகர நிர்வாகிகளுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோரிடம் நேரில் தான் மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், அதற்குப் பிறகும் காவல்துறை கண்துடைப்பு நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் அகற்றுவதற்காக – நகரின் நலன் விரும்பும் அனைத்து பொதுமக்களும் இணைந்து செயலாற்றிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், அதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறும் அவர் – கூட்டத்தில் பங்கேற்ற நகரின் சமூக ஆர்வலர்களைக் கேட்டுக்கொண்டார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களின் நிறைவில், 11.08.2018. சனிக்கிழமையன்று (இன்று) நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களின் அங்கத்தினர் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டத்தை, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, 11.08.2018. சனிக்கிழமையன்று 10.30 மணிக்கு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வலிமையான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஜலாலிய்யாவில் நடைபெறும் கூட்டம் குறித்து, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் அறிவிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |