திராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 07.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் – காயல்பட்டினம் நகர திமுக கிளை சார்பில் இரங்கல் பேரணி & கூட்டம் நேற்று (11.08.2018. சனிக்கிழமை) நடைபெற்றது.
அன்று 16.45 மணிக்கு, காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு, 17.00 மணிக்கு கடற்கரையைச் சென்றடைந்தது. பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் துவங்கியது.
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப் பெருமாள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர செயலாளர் முத்து முஹம்மத், மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், அதிமுக நகர செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், அதன் ஒன்றியச் செயலாளர் தளபதி ராமச்சந்திரன், திராவிடர் கழக மண்டல தலைவர் பால்ராஜ் சுந்தரம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், ஆதித் தமிழர் பேரவை சார்பில் சபாபதி வேந்தன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஆஸாத், மதிமுக மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் தமிழினியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகு முத்துப்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் என்.எஸ்.நெய்னா முஹம்மத், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிவபெருமாள், காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.
உரைகளைத் தொடர்ந்து, கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பேரணி & இரங்கல் பொதுக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் & அங்கத்தினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். |