அண்மையில் நடந்து முடிந்த 1-ஆவது காயல் புத்தகக் கண்காட்சி நிகழ்வினையொட்டி, தூத்துக்குடி அகில இந்திய வானொலியின் மூலம், சாகித்ய அகடெமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் நேர்காணல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நேர்காணலானது, 17.08.2018 & 24.08.2018 ஆகிய தேதிகளில இரு பிரிவுகளாக ஒலிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்து, காயல் புத்தகக் கண்காட்சி 2018 ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:
அன்புடையீர் உங்கள் அனைவரின்மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!
கடந்த 18, 19, 20 ஜுலை 2018 ஆகிய தேதிகளில், காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து, முதலாவது காயல் புத்தகக் கண்காட்சியை, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்புற நடத்தியதை தாங்கள் அறிவீர்கள்.
உள்ளூர் & வட்டார பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், திறமையான பேச்சாளர்கள், தரமான சிந்தனைகளை சமூகத்திற்கு தரும் புத்தக வெளியீடங்கள் & தன்னார்வலர்கள் என பல தரப்பினரின் சிறப்பான பங்களிப்பினால், இந்நிகழ்வு பெருவெற்றிக்கொண்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!
தமிழின் மூத்த எழுத்து சிற்பி
தோப்பில் முஹமது மீரான் தமிழ் & மலையாள எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் செப்டெம்பர் 26, 1944-யில் பிறந்தார்.
இவர் 6 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் & சில மொழிபெயர்ப்புகளும் எழுதி வெளிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997-யில் தமிழுக்கான சாகித்ய அகடெமி விருது பெற்றது.
விருதுகள்
சாகித்ய அகடெமி விருது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
புதினங்கள்
ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
துறைமுகம் (1991)
கூனன் தோப்பு 1993)
சாய்வு நாற்காலி (1997)
அஞ்சுவண்ணம் தெரு (2010)
குடியேற்றம் (2016)
சிறுகதைத் தொகுப்புகள்
அன்புக்கு முதுமை இல்லை
தங்கரசு
அனந்தசயனம் காலனி
ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
தோப்பில் முகமது மீரான் கதைகள்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
வேர்களின் பேச்சு (அனைத்து சிறுகதைகளின் தொகுப்பு)
மொழிபெயர்ப்புகள்
தெய்வத்தின் கண் (என்பி.முகமது)
வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) (எம். என். கரச்சேரி)
காயல் புத்தகக் கண்காட்சி 2018 நிகழ்வின் மூன்றாம் & இறுதி நாளான 20 ஜுலை 2018 அன்று, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அழகிய உரையை வழங்கினார். தமிழின் மூத்த எழுத்து சிற்பியின் வரவால் காயல் புத்தகக் கண்காட்சி 2018 தன்னை பொலிவுபடுத்திக்கொண்டது.
சிறப்பு விருந்தினரின் சிறப்பு நேர்காணல்
சாகித்ய அகடெமி விருதுபெற்ற இந்த மூத்த எழுத்தாளரின் நேர்காணல் நிகழ்ச்சி, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நேர்காணலானது, வருகின்ற 17.08.2018 & 24.08.2018 ஆகிய தேதிகளில் 6:15 மணிக்கு தூத்துக்குடி அகில இந்திய வானொலியின் திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் அலைவரிசையில் (நடுவணலை / AIR Medium Wave – 1053 kHz) பண்பாட்டு பலகணி நிகழ்ச்சியில் இருபிரிவுகளாக (இரு வெள்ளிக்கிழமைகளிலும்) ஒலிபரப்பப்படவுள்ளது (இறை சித்தம்).
வாய்ப்புள்ள பெருமக்கள் இந்த சிறப்புவாய்ந்த நேர்காணலை கேட்டுமகிழுங்கள். இந்த நேர்காணலின் இரு பிரிவுகளும் வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட பின்னர், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் மூலம், இணையத்திலும் பகிரப்படும் (இறை நாட்டம்).
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு:
இன்று மாலை ஒலிபரப்பாக இருந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் நேர்காணல் (முதலாம் பகுதி), 21.08.2018 செவ்வாய் அன்று மாலை 6:15 மணிக்கு ஒலிபரப்பாகும் (இறை சித்தம்).
புதுப்பிக்கப்பட்ட செய்தி:
17.08.2018; பிற்பகல் 2:00 மணி
-------------------------------------------------------------
தகவல்:
காயல் புத்தகக் கண்காட்சி 2018 ஒருங்கிணைப்புக் குழு
https://www.facebook.com/kayalbookfair2018/> |