காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் இதமழை பெய்தது. இதன் காரணமாக, நகரில் சில நாட்களாக நிலவிய வெப்ப வானிலை தணிந்துள்ளது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 09.50 மணி நிலவரப்படி, நகரில் வெயில் இல்லை. குளிர்ந்த காற்று வீசுகிறது. இதமான வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே முதலாவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 50.3 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
நேற்று, கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையே ‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, அப்பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதோடு, கனமழை பெய்துள்ளது. ‘கஜா’ புயல் எதிரொலியாகவே தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்று பெய்துள்ள இம்மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். |