இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், 12.11.2018. திங்கட்கிழமையன்று 20.30 மணியளவில், அதன் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான - சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அறிமுகவுரையாற்றினார்.
ஏ.கே.ஜவாஹிர், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, எம்.எச்.அப்துல் வாஹித், கே.எம்.என்.முஹம்மத் உமர், எம்.இசட்.சித்தீக், மஹ்மூத் நெய்னா உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
மாநில பொதுச் செயலாளரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராகத் தான் பொறுப்பேற்றது முதல் அன்று வரையுள்ள தனது செயல்பாடுகளை அவர் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்தில் வக்ஃப் நிறுவனங்கள் தொடர்பாக வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், அதில் தனது பங்கேற்பு குறித்தும் விளக்கிப் பேசிய அவர், காயல்பட்டினத்தில் – வாட்ஸப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தகவல்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, அவை தவறான தகவல்கள் என்று கூறியதோடு, அது தொடர்பான தனது நடவடிக்கைகளையும் விவரித்தார்.
வக்ஃப் தொடர்பான எந்தப் பிரச்சினையானாலும், அதற்குத் தீர்வு காண விரும்புவோர் அதை வக்ஃப் வாரியத்திடம் முறைப்படி முறையிட வேண்டும் என்றும், வாரியத் தலைவரும், உறுப்பினர்களும் இதுகுறித்து கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவர் என்றும், காயல்பட்டினத்திலிருந்தும் அவ்வாறு பெறப்பட்ட முறையீடு குறித்து வாரியத்திலுள்ள தலைவரும், அங்கத்தினரும் கலந்தாலோசித்து – ஏகமனதாகவே எதையும் செய்து வருவதாகவும் கூறிய அவர், அவ்வாறு செய்யப்படுவதை மட்டுமே தான் விரும்புவதாகவும் கூறினார். தனது நடவடிக்கைகள் குறித்து – கூட்டத்தில் பங்கேற்றோரின் ஆலோசனைகளை அவர் கேட்டபோது, இனி வருங்காலங்களிலும் – அதே நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ளுமாறு அவர்கள் கருத்துக் கூறினர்.
இதர அம்சங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் துணைச் செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீனின் மாமனார் ஹாஃபிழ் எல்.எம்.கே.செய்யித் மஹ்மூத் என்ற ‘எல்.எஸ்.எம்.ஹாஃபிஸா’,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலங்கை நிகழ்ச்சிகளை முன்னின்று ஒருங்கிணைக்கும் பணியைத் தன்னார்வத்துடன் தொடர்ந்து செய்து வரும் – இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் செயலாளர் பி.எம்.ரஃபீக் உடைய சகோதரர், இலங்கை தலைநகர் கொழும்புவில் காலமான பி.எம்.இக்பால் புகாரீ
ஆகியோரின் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டதோடு, அவர்களது மக்ஃபிரத்திற்காக துஆ இறைஞ்சப்பட்டது.
தீர்மானம் 2 – பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு:
காயல்பட்டினத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த - கட்சியின் பொதுக்கூட்டத்தை, மழைக்காலத்தைக் கருத்திற்கொண்டு தற்போதைக்கு ஒத்தி வைக்கவும், ஜனவரி மாதத்தில் ஒரு நாளை நிச்சயித்து நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – நகராட்சிக்கு வேண்டுகோள்:
பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் மழை நீர் தேங்கி, ஏற்கனவே சேதமுற்றிருந்த சாலைகள் மேலும் குண்டுங்குழியுமாகி, போக்குவரத்திற்கு முற்றிலும் தகுதியற்ற நிலைக்கு மாறி வருகிறது.
இதைக் கருத்திற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மழைக்காலம் முடிவுற்றதும் காலம் தாழ்த்தாமல் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சேதமுற்ற பழைய சாலைகளை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு புதிய சாலைகளை அமைக்கவும் காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 – மழைக்கால மீட்புப் பணி:
நிகழும் பருவமழை யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் பெய்து முடிக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதோடு, மழையால் எங்கேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்சியினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளையும், தேவைப்படும் இதர பணிகளையும் தன்னார்வத்துடன் செய்திட வேண்டும் என இக்கூட்டம் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைச் செயலாளர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |