நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் தனித்தும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்தும் - சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோமான் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப் பள்ளியில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விழிப்புணர்வுரையாற்றினார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் பருகக் கொடுக்கப்பட்டது.
காயல்பட்டிம் நகராட்சி வளாகத்திலுள்ள சுகாதாரக் கேடுகள் குறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தில் சமூக ஆர்வலர் ஒருவரால் படங்களுடன் பதிவிடப்பட்டதையடுத்து, அவை குழுமத்தின் சார்பில் நகராட்சிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. உடனடியாக அங்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பேருந்து நிலைய வளாகத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான சோதனைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவிலும், ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலக வளாகத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நிலவேம்புக் குடிநீர் பருகக் கொடுக்கப்பட்டது.
கொசுக்களை ஒழிப்பதற்காக நகராட்சி சார்பில் நகரின் அனைத்து தெருக்களிலும் கொசு ஒழிப்புப் புகை அடிக்கப்பட்டது.
சின்ன நெசவுத் தெரு – பெரிய நெசவுத் தெரு இடைச்சாலைலும், அங்குள்ள மூப்பனார் ஓடையிலுமுள்ள பழுதுகளை – அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ‘ஸ்கட்’ அபூ நகராட்சிக்குச் சுட்டிக்காட்டியதையடுத்து, உடனடியாக அவை நகராட்சியால் சரி செய்யப்பட்டன.
|