காயல்பட்டினம் நகராட்சியால் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்படும் குடிநீரைப் பகிர, அந்தந்தப் பகுதிகளில் வால்வு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அத்தொட்டிகள் எதற்குமே மூடி கிடையாது. கடந்த காலங்களில் இதற்கென பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் – அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் மூடி போடப்பட்டதைத் தவிர வேறெதுவும் நடைபெறவில்லை.
எந்நாளும் திறந்தே கிடக்கும் இந்தத் தொட்டிகளில் மழை நீர், அந்தந்தப் பகுதிகளிலுள்ள கழிவு நீர் தேங்கியே இருக்கும். அப்பகுதி மக்கள் பலருக்கு அவை குப்பை போடும் தொட்டியாகவும் “பயன்பட்டு” வருகிறது. குழந்தைகளுக்கு அணிவித்து அசுத்தப்பட்டுப் போன டயாபர்கள், பெண்கள் மாதவிடாயின்போது அணிந்தகற்றும் சானிட்டரி நாப்கின்கள் என சகலமும் அதற்குள் அடக்கம்.
சாதாரணமாகக் குடிநீர் பகிர்மானத்தின்போதே இத்தொட்டிகளிலுள்ள அசுத்த நீர் குழாய்க்குள் புகுந்து, வீடுகள் வரை செல்லும். பற்றாக்குறைக்கு – பெரும்பாலும் பல வீடுகளில் இன்று மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது புரிந்துணர்வில் அனுமதிக்கப்பட்டுவிட்டதால், அவற்றால் வேகமாக நீர் உறிஞ்சப்படுகையில், இத்தொட்டிகளிலுள்ள அசுத்த நீரும் வலிமையுடன் உள்ளிழுக்கப்பட்டு, அனைத்து இல்லங்களுக்கும் சேர்ப்பிக்கப்படுகிறது.
கீழ நெய்னார் தெருவில் – கலீஃபா அப்பா தைக்கா அருகிலுள்ள வால்வு தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் இதுபோன்ற அசுத்தங்கள் காணப்பட்டதோடு, எலிக்குட்டி, பெருச்சாளி போன்றவையும் குடியிருந்தன. இந்த அவலத்தைச் சுட்டிக்காட்டி, முகைதீன் என்ற சமூக ஆர்வலர் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தில் அசைபடத்துடன் பதிவிட்டிருந்தார். குழுமத்தின் மூலம் இதுகுறித்து, நகராட்சிக்கு உடனடியாக முறையிடப்பட்டதையடுத்து, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் மேற்பார்வையில் – துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி மேற்பார்வையில் அத்தொட்டியில் உள்ள அசுத்தங்களை அகற்றி, துப்புரவு செய்தனர்.
என்றாலும் முறையாக மூடிகள் அமைக்கப்படாத வரை இக்குறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பது கடந்த கால நடவடிக்கைகள் அடிப்படையிலான சமூக ஆர்வலர்களின் புரிதலாக உள்ளது.
அதுபோல, காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகில் – “தூய்மை இந்தியா” என நகராட்சியால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையின் அடியிலேயே மூடை மூடையாக குப்பைகள் – பொறுப்பற்ற பொதுமக்கள் சிலரால் தேக்கி வைக்கப்பட்டிருந்ததையும் – சமூக ஆர்வலர் முகைதீன் படங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார். குழும முறையீட்டைத் தொடர்ந்து, அவையும் நகராட்சியால் அள்ளியகற்றப்பட்டன.
|