காயல்பட்டினம் நகராட்சியால் பொதுமக்களுக்கு அடிப்படைச் சேவைகள் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் உள்ளது என்ற தகவலை உள்ளடக்கி - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் - குறைந்தது 6 கோடி ரூபாய் ஆண்டு வருவாயில், 1.86 கோடி ரூபாய் (2016 - 17) - அதாவது மூன்றில் ஒரு பங்கு - ஊழியர்கள் வகைக்கு செலவு செய்யப்படும் விபரத்தை, கடந்த பாகத்தில் கண்டோம்.
மீதியுள்ள சுமார் 4.5 கோடி ரூபாய், எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்ற விபரத்தை இந்த பாகத்தில் காண்போம்.
எஞ்சியுள்ள தொகையில் (சுமார் 4.5 கோடி ரூபாய்), 2016 - 2017 நிதியாண்டில், கீழ்க்காணும் மூன்று தலைப்பிலான பணிகளுக்கு - காயல்பட்டினம் நகராட்சி, 1,73,33,573 ரூபாய் செலவு செய்தது.
(C) OPERATING EXPENSES (இயக்க செலவுகள்)
(D) REPAIRS & MAINTENANCE (பராமரிப்பு செலவுகள்)
(E) PROGRAM EXPENSES (திட்ட செலவுகள்)
மேலுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் கீழ் - செய்யப்பட்ட செலவீனங்கள் கீழே வழங்கப்படுகின்றன.
(C) OPERATING EXPENSES (இயக்க செலவுகள்) (மொத்தம் - 62,05,316)
-- Streetlight maintenance (தெருவிளக்குகள் பராமரிப்பு) = 36,40,366
-- Sanitary conservation expenses (சுகாதாரப் பணிகள்) = 2,97,850
-- Scavenging materials (சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள்) = 5,04,000
-- Water supply through private lorries (தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்) = 17,63,100
(D) REPAIRS & MAINTENANCE (பராமரிப்பு செலவுகள்) (மொத்தம் - 1,09,20,847)
-- Light vehicle maintenance (கனமற்ற வாகனங்கள் பராமரிப்பு) = 18,84,622
-- Heavy vehicle maintenance (கனரக வாகனங்கள் பராமரிப்பு) = 12,16,679
-- Repairs & maintenance (Drainage and culverts) (வடிகால் / வாய்க்கால் பராமரிப்பு) = 95,400
-- Expenditure (Amma Unavagam) (அம்மா உணவகம்) = 50,92,392
-- Water Supply Maintenance & Sewerage Maintenance (குடிநீர் மற்றும் கழிநீர் பராமரிப்பு) = 26,31,754
(E) PROGRAM EXPENSES (திட்ட செலவுகள்) (மொத்தம் - 2,07,410)
-- Election expenses (தேர்தல் செலவுகள்) = 1,18,378
-- Anti-filaria / anti-malaria operations (மலேரியா / பைலேரியா எதிரான பணிகள்) = 89,032
மேலுள்ள - மூன்று தலைப்புகள் கீழான செலவீனங்கள், தெருவிளக்கு பராமரிப்பு, குப்பைகளை அள்ளுவது, குடிநீர் வழங்குவது போன்ற நகராட்சியின் அடிப்படை சேவைகள் வகையிலானது. இந்த வகைகளுக்கு, 2016 - 2017 காலகட்டத்தில், வருவாயில் சுமார் மூன்றில் ஒரு பங்கை (சுமார் 1.73 கோடி ரூபாய்), காயல்பட்டினம் நகராட்சி செலவிட்டுள்ளது.
இந்த வகை செலவீனங்களில் - அதிகளவில் முறைகேடுகளும் நடக்கின்றன; மக்கள் வரிப்பணமும் விரையம் செய்யப்படுகிறது.
// 2016 - 2017 காலகட்டத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 36 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை, திருநெல்வேலியை சார்ந்த சர்ச்சைக்குரிய கங்கா எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதலில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை - 21 லட்சம் ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையை விட, அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள்படி இந்த நிறுவனம், நகரில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தகுதியான, போதிய ஊழியர்களை நியமனம் செய்யவில்லை. இந்த முறைக்கேடு குறித்து தனியாக செய்தி பின்னர் வெளியிடப்படும்.
// 2016 - 2017 காலகட்டத்தில், சுகாதாரப்பணிகளுக்கு 8 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையிலான செலவீனங்கள், 2017 - 2018 மற்றும் அதன் பிறகான காலகட்டங்களில், 60 - 80 லட்சம் வரை உயர உள்ளன. 2017 முதல், வீடுவீடாக சென்று குப்பைகளை பெற, 50 பணியாளர்கள், KR CONSTRUCTIONS என்ற தென்திருப்பேரையை சார்ந்த நிறுவனம் பெற்ற ஒப்பந்தப்புள்ளி மூலம் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட விஷயம் உட்பட பல்வேறு விஷயங்களில் நடந்த முறைகேடுகள் தற்போது - விசாரணையில் உள்ளது. முதற்கட்ட விசாரணைகள் நிறைவுற்று, அடுத்தக்கட்ட விசாரணைகள் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ளன.
// ஏற்கனவே 30 நிரந்தர துப்பரவு பணியாளர்கள் உள்ள காயல்பட்டினம் நகராட்சியில், தனியார் மூலம் 50 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுவதாக கூறப்படும் சூழலில், டெங்கு பணிக்கு என 30 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நகராட்சி ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது துப்பரவு பணிகளுக்கு என்றே, காயல்பட்டினம் நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள்!
// வேடிக்கை என்னவென்றால், 2017 ஆம் ஆண்டு, இன்னும் கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்களை தனியார் மூலம் நியமனம் செய்ய நகராட்சி விளம்பரம் செய்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி - ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படவேண்டிய சூழலில், அந்த முயற்சியை பின்னர் கைவிட்டது. அந்த 50 துப்பரவு பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தால், காயல்பட்டினத்தில் துப்பரவு பணிகளுக்கு என்றே 150 பேர் பணியில் இருப்பர். இவ்வகை சம்பளத்திற்கு மட்டும், சுமார் 1.5 கோடி ரூபாய் செலவு செய்யப்படவேண்டிய சூழல் உருவாகியிருக்கும்.
// தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய, 2016 - 2017 காலகட்டத்தில், 17 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தணிக்கைத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. TWAD மூலம் போதிய குடிநீர் விநியோகம் இருந்தும், திட்டமிட்டே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கி, காலகாலமாக நடைபெற்று வந்த முறைக்கேடு இது. தரமற்ற இந்த லாரி குடிநீர் விநியோகம் மூலம் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள், நகரின் புறநகர் பகுதி மக்கள். இரண்டாம் குடிநீர் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தபிறகு, இந்த வகை முறைக்கேடுகள் தொடருமா என கண்காணிக்கவேண்டும்.
// காயல்பட்டினம் நகராட்சியின் கனமற்ற / கன ரக வாகனங்களை பராமரிக்க, 2016 - 2017 காலகட்டத்தில், 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, தணிக்கைத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்களுக்கு எரிவாயு வாங்கியது சம்பந்தமான ஆவணங்களை முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆபிதா சேக் தலைமையிலான நகர்மன்றம் கோரியபோது - அந்த ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறிய அவல சம்பவங்கள் பலருக்கு தெரியாது.
// 2016 - 2017 தணிக்கைத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்றொரு செலவீனம், அம்மா உணவகம் வகைக்கானது. 50 லட்சம் ரூபாய், இவ்வகைக்காக, ஓர் ஆண்டில் செலவு செய்யப்பட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் நகராட்சியில் மே 2015 முதல் அம்மா உணவகம் செயல்புரிந்து வருகிறது. முந்தைய ஆண்டில் - இந்த வகைக்கான செலவு சுமார் 28 லட்சம் தான்! சுமார் 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது! வலியோர் பயனடைய துவங்கப்பட்ட இந்த திட்டத்தினால், அதிகம் பயனடைவது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான்
// குடிநீர் விநியோகம் வகைக்காக 26 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக - 2016 - 2017 நிதியாண்டு தணிக்கைத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வகையில் பெருமளவு செலவு - TWAD அரசு நிறுவனத்திற்கு, குடிநீர் வழங்கியதற்காக - வழங்கிய தொகையாகும். இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவுற்ற பிறகு - காயல்பட்டினம் நகராட்சியின் நேரடி பராமரிப்பில் - இந்த வகைக்கு எவ்வளவு செலவு காண்பிக்கப்படும் என்பது வரும் ஆண்டுகளில் தெளிவாகும்.
இதுவரை நாம் கண்டுள்ள விபரங்கள்படி - ஊழியர் சம்பளம் வகைக்கும், அடிப்படை சேவைகள் வழங்கும் வகைக்கும் - காயல்பட்டினம் நகராட்சி சுமார் 3.7 கோடி ரூபாய் - ஆண்டொன்றுக்கு - செலவு செய்கிறது என்பதை கண்டோம். மீதியுள்ள சுமார் 2.5 கோடி ரூபாய் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தொடரும் பாகத்தில் காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 6, 2018; 10:30 am]
[#NEPR/2018110601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|