அரசுக்கு நாம் வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பொதுமக்களுக்குச் சொன்ன அறிவுரைத் தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
பிப்ரவரி 2016 இல் - மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. பலகோடி ரூபாய் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அந்த வழக்கு விபரத்தை பார்வையிட்ட நீதிபதி அருண் சவுதரி அதிர்ச்சியுற்றார்.
அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாக, பல்வேறு கருத்துக்களை திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி அன்றைய தினம் பதிவு செய்தார்.
அவற்றின் சாராம்சம்:
// ஊழலை எதிர்த்து, அரசாங்கங்களுக்கு எதிராக - பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்
// வரி செலுத்தும் பொது மக்கள், கடந்த பல ஆண்டுகளாக கடுமையான வருத்தத்தில் உள்ளார்கள்
// ஊழல் என்பது பல தலைகள் கொண்ட அசுரன்
// மக்களின் கடுமையான அதிருப்தியை அரசாங்கங்கள் உணர வேண்டும்
// அரசாங்கங்கள் விளையாடவா பொது மக்கள் வரிசெலுத்துகிறார்கள்?
// எவ்வாறு மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுகிறது என்பதை காணும்போது அதிர்ச்சியாகவுள்ளது
// இந்த நிலை தொடர்ந்தால், ஒத்துழையாமை இயக்கம் மூலம் பொது மக்கள் வரி செலுத்த மறுக்க வேண்டும்
நீதிபதி அருண் சவுதரியின் கருத்துக்கள் - நாடு முழுவதும் பொருந்தக்கூடியவை. ஏன் - நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள காயல்பட்டினத்திற்கும் பொருந்தக்கூடியவை.
https://timesofindia.indiatimes.com/city/nagpur/Dont-pay-taxes-if-government-fails-to-curb-corruption-HC/articleshow/50826888.cms
இச்சிறு நகராட்சியில், ஆளும் கட்சி / எதிர் கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், அரசு அதிகாரிகள் / ஒப்பந்ததார்களுடனான கூட்டணியில், எவ்வாறெல்லாம் - மக்கள் வரிப்பணம் சூறையாடப்பட்டது / சூறையாடப்படுகிறது என்பதற்கு நாம் அனைவரும் சாட்சி.
காயல்பட்டினம் நகராட்சியில் அரங்கேறிய மோசடிகள் குறித்து - இன்றளவும் - பல வழக்குகள் விசாரணையில் உள்ளன.
ஊழலை கண்காணிக்க வேண்டிய / கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து அமைப்புகளையும் வழு இழக்க செய்த அரசாங்கம், உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி - புதிய வரிகளை அமல்படுத்துகிறது; ஏற்கனவே செலுத்தப்படும் வரிகளை கடுமையான அளவுக்கு உயர்த்துகிறது.
அவர்கள் கூறும் காரணம்?
வரி மூலம்தான் அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது. அந்த வருமானம் வந்தால்தான் - மக்கள் பணி செய்ய இயலும்.
உண்மைதான்.
ஆனால் - ஊழல் மூலமாக சுரண்டப்படும் சுமார் 30 சதவீத மக்கள் வரிப்பணத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?
அந்த வரிப்பணம் சூறையாடப்படாமல் - கஜானாவில் இருந்தால், புதிய வரிகள் அறிமுகம் செய்ய / உள்ள வரிகளை உயர்த்த அவசியம் ஏற்படுமா?
அடுத்தடுத்த பாகங்களில் - காயல்பட்டினம் நகராட்சியை உதாரணமாக எடுத்துக்கொண்டு - எவ்வாறு மக்கள் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்படுகிறது, அதனை தடுத்தாலே புதிதாக எந்த வரியும் அறிமுகம் செய்ய அவசியமில்லை; வரிகளை உயர்த்த வேண்டிய தேவையில்லை என்பதை விரிவாக - இறைவன் நாடினால் - காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 4, 2018; 4:30 pm]
[#NEPR/2018110402]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|