ஊழல் எதிர்ப்பு வாரம் நிறைவுறுவதையொட்டி, நகராட்சி தொடர்பான முறைகேடுகள் குறித்து யாரிடம் முறையிடுவது என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் - ஊழல் / லஞ்சம் ஆகியவற்றை தடுக்க உருவாக்கப்பட்ட அமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC).
இருப்பினும், 2014 ஆம் ஆண்டு, தமிழக அரசு நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் (TAMILNADU LOCAL BODIES OMBUDSMAN) சட்டத்தின்படி, உள்ளாட்சித்துறை சம்பந்தமான முறைக்கேடு / லஞ்சம் / ஊழல் போன்ற புகார்களை விசாரிக்க தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பிடம், மாநகராட்சி / நகராட்சி / டவுன் பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அதற்கான பிரத்தியேக விண்ணப்பம் உள்ளது.
இந்த முறைமன்றத்தில் - ஒரு உள்ளாட்சி மன்றத்தின் ஆணையர் / செயல் அலுவலர், அவர் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் புகார் பதிவு செய்யலாம்; உள்ளாட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீதும் புகார் பதிவு செய்யலாம்; உள்ளாட்சிமன்றத்தின் ஒப்பந்ததாரர் மீதும் புகார் பதிவு செய்யலாம்.
மண்டல (RDMA) மற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை (CMA) அதிகாரிகள் மீது - இந்த முறைமன்றத்தில் புகார்கள் பதிவு செய்யமுடியாது. மண்டல மற்றும் தலைமை அலுவலக அதிகாரிகள் முறைக்கேடுகளில் ஈடுபட்டால், லஞ்சம் ஒழிப்புத்துறையிடம் புகார் பதிவு செய்யலாம்.
முறைமன்றத்தில் எவ்வாறு புகார் பதிவு செய்வது?
மேலே தெரிவித்தது போல் - முறைமன்றத்தில் புகார் பதிவு செய்ய, பிரத்தியேக படிவம் உள்ளது. அந்த படிவத்தில் - ரூபாய் 10 காண நீதிமன்ற வில்லை ஓட்டவேண்டும்.
அந்த படிவத்தில் - ஆறு வகையான தகவல்கள் கோரப்பட்டிருக்கும்.
முதல் இரண்டு தகவல்கள் - புகார் தெரிவிப்பவரின் பெயர் மற்றும் தொடர்பு விபரம்; இது கண்டிப்பாக நிரப்பப்படவேண்டும்
மூன்றாம் தகவல் - யார் மீது புகார் பதிவு செய்யப்படுகிறதோ, அவரின் பெயர் மற்றும் பொறுப்பு
நான்காவது தகவல் - புகார் விபரம்; அவசியம்பட்டால் தனித்தாளில் விபரம் பதியலாம்
ஐந்தாவது தகவல் - சாட்சிகள் இருப்பின், அவர்கள் பெயர் மற்றும் விலாசம்
ஆறாவது தகவல் - புகார் சம்பந்தமான இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் விபரம்
ஒன்றுக்கு மேற்பட்டவர் மீது, ஒரே குற்றத்திற்காக புகார் பதிவு செய்யப்படுகிறது என்றால், ஒரே படிவத்தை (1,2,3...) பயன்படுத்தலாம். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகல்களை இணைக்க வேண்டும்.
புகார்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவேண்டும்:
தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்,
எண்.100, அண்ணாசாலை,
கிண்டி, சென்னை-600 032.
மின்னஞ்சல்: ombudsmanlocal@tn.gov.in
இந்த முறைமன்றம் - நீதிமன்றத்திற்கான பல்வேறு அதிகாரங்களை பெற்றுள்ளது. மேலும் - ஓய்வுபெற்ற IAS அதிகாரி இதில் நடுவராக உள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 3, 2018; 4:30 pm]
[#NEPR/2018110304]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|