ஊழல் எதிர்ப்பு வாரம் நிறைவுறுவதையொட்டி, பொதுமக்கள் லஞ்சத்திற்கெதிரான கண்காணிப்பு நடவடிக்கைகளைச் செய்வது குறித்தும், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் முறையிடுவது குறித்தும் தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஒவ்வொரு ஆண்டும் - நாடு முழுவதும், அக்டோபர் இறுதி முதல் நவம்பர் துவக்கம் வரை, ஊழல் விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK) கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, ERADICATE CORRUPTION - BUILD A NEW INDIA (ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியா படைப்போம்) என்ற தலைப்பில் - அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரை, நாடு முழுவதும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஊழலுக்கு எதிரான போராட்டம் - ஒரு வாரம் மட்டும் நடத்தப்படக்கூடிய போராட்டம் அல்ல; அனுதினமும் மேற்கொள்ளப்படவேண்டிய போராட்டம்.
பல்வேறு அரசு துறைகளில் காணக்கிடைக்கும் ஊழல் - லஞ்சத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மெகா | நடப்பது என்ன? குழுமம், பல மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதை - பொது மக்கள் அறிவர்.
இப்போராட்டத்தில் முழு வெற்றி காண, இது மக்கள் போராட்டம் ஆவது மிகவும் அவசியம். அந்த திசையில், *மெகா | நடப்பது என்ன? குழுமம், தொடர்ந்து தனது பணிகளை - இறைவன் நாடினால் - மேற்கொள்ளும் என்ற உறுதிமொழியை, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு தினத்தில் வழங்குகிறது.
பொதுமக்கள் - தாங்கள் அன்றாடம் சந்திக்கும் அரசு துறைகளில், லஞ்சம் / ஊழல் கண்டால், அதுகுறித்த புகாரினை - எளிதாக, லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு அனுப்பலாம். இதுகுறித்த படிவம்:-
இந்த படிவத்தில் ஏழு வகையான தகவல்கள் மட்டும் கோரப்படுகின்றன. பொதுமக்கள் அவற்றை எளிதாக நிரப்பலாம்.
முதல் இரண்டு தகவல் - உங்கள் பெயர் மற்றும் முகவரி. இதனை நீங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டாலும், அதனை சில காரணங்களுக்காக நீங்கள் தவிர்க்க விரும்பினால், உங்கள் பெயர் / முகவரி நீங்கள் தவிர்க்கலாம்.
மூன்றாவது தகவல் - யாருக்கு எதிரான புகார் இது?
நான்காவது தகவல் - குற்றச்சாட்டு விபரம்
ஐந்தாவது தகவல் - அந்த குற்றத்திற்கு சாட்சிகள் ஏதும் இருந்தால் அதன் விபரம்
ஆறாவது தகவல் - அந்த குற்றத்தை நிரூபிக்க ஆவணங்கள் ஏதும் இருந்தால் அதன் விபரம்
ஏழாவது தகவல் - அந்த குற்றத்தை வேறு ஏதேனும் அரசு அமைப்பு முன்னர் விசாரித்திருந்தால் அது குறித்த விபரம்
இந்த புகாரை, கீழ்க்காணும் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம்.
THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
No. 293, MKN ROAD,
ALANDUR, CHENNAI – 600 016.
இந்த வழிமுறை - கிராம நிர்வாக அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், மின்சார அலுவலகம், தாலுகா அலுவலகம், ரேஷன் விநியோக அலுவலகம், போக்குவரத்துத்துறை காவல்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை என அனைத்து அரசு துறைகளுக்கும் பொருந்தும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 3, 2018; 11:30 am]
[#NEPR/2018110302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |