காயல்பட்டினம் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே – எந்த வரி உயர்வுக்கும் அவசியம் இருக்காது என்ற தகவலை உள்ளடக்கி - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
நாம் முதல் ஐந்து பாகங்களில் கண்டது போல - காயல்பட்டினம் நகராட்சியின் ஆண்டு வருவாய் - குறைந்தது சுமார் 6 கோடி ரூபாய் ஆகும். இது தவிர - அரசு மானியங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டும் - உறுதி இல்லை என்றாலும், கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதனையும் கண்டோம்.
செப்டம்பர் மாதம் காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்ட அறிக்கைப்படி, சொத்து வரிக்காக நிர்ணயம் செய்யப்பட்ட, அடிப்படை கட்டணத்தை (BASIC RATE) - 200 சதவீதத்திற்கும் மேலே காயல்பட்டினம் நகராட்சி உயர்த்தியுள்ளது.
அவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், முந்தைய வரித்தொகையை விட - குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கு மேலும், குடியிருப்பு இல்லாத சொத்துகளுக்கு 100 சதவீதத்திற்கு மேலும் - வரி உயராது எனவும் நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் - இது ஏற்புடைய பதில் அல்ல என்பதை, விளக்கங்களுடன் ஏற்கனவே - மெகா | நடப்பது என்ன? குழுமம் செய்தி வெளியிட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் 2016 - 2017 நிதி ஆண்டு தணிக்கைத்துறை அறிக்கைப்படி, சொத்துவரி மூலமான வருவாய் 72 லட்சம் ரூபாய் ஆகும். தற்போது உயர்த்தப்படும் வரிகள் மூலம் - கூடுதலாக குறைந்தது, 1 கோடி ரூபாய், வசூல் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி, திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வரி உயர்வு அவசியம்தானா?
காயல்பட்டினம் நகராட்சியில் கடைசியாக வரி உயர்த்தப்பட்டது 2008 ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் நடந்த பொது சீராய்வின் போதாகும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை - வரி சீராய்வு நடக்கலாம் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 தெரிவித்தாலும், கடந்த காலங்களில் - பல்வேறு சூழல்களை கருத்தில்கொண்டு, சீராய்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடைசியாக சென்னை மாநகராட்சியில் சீராய்வு நடந்தது 1998 ஆம் ஆண்டு ஆகும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீராய்வு நடக்கலாம், பத்தாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் தற்போது சீராய்வு நடத்தப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. நம் முதல் கேள்வி இது சம்பந்தமாக இது தான்; சட்டப்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீராய்வு நடத்தலாம் என்றாலும், எவ்வளவு உயர்த்தலாம் என்று நிர்ணயம் செய்யும் உரிமை யாருடையது? அரசுடையாதா? உள்ளாட்சி மன்றங்களுடையதா?
மாவட்ட நகராட்சிகள் சட்டம் - இந்த உரிமை, உள்ளாட்சி மன்றங்களுடையது என தெளிவாக கூறுகிறது. அப்படி இருக்க - உள்ளாட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தப்படாமல், அரசு அதிகாரிகள் மூலம் நிர்வாகத்தை நடத்திக்கொண்டு, மக்களின் ஆட்சேபனைகளை துளியும் மதியாமல்,, வரியினை உயர்த்த - அரசுக்கு அதிகாரம் உள்ளதா?
லஞ்சம் / ஊழல் காரணமாக உள்ளாட்சிமன்றங்களின் நிதி - வீண் விரயம் ஆகக்கூடாது என்பதற்காக, மத்திய நிதிக்குழுவின் நிர்பந்தப்படி உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் நடுவம், திறனாக செயல்பட அரசு அனுமதித்துள்ளதா? அதன் உத்தரவுகளை அரசு மதித்து, லஞ்சம் / ஊழலை தடுத்துள்ளதா? இல்லையே!
காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் தொடர்ந்த வழக்கில் - டிசம்பர் 2016இல், முறைமன்றம் வெளியிட்ட ஆணையப்படி உருவாக்கப்பட்ட ராஜாராம் IAS தலைமையிலான குழுவின் அறிக்கையை - விசாரணை நிறைவுற்றுவிட்டதாக கூறும் நகராட்சி நிர்வாகத்துறை - இன்றைய தேதி வரை வெளியிடாமல் போலியான காரணங்களை கூறி தவிர்த்து வருகிறதே?
இந்நிலையில் - காயல்பட்டினம் நகராட்சியில், ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்துக்கு பதில் / நீதி வழங்கப்படாமல், அரசுக்கோ, நகராட்சி நிர்வாகத்துறைக்கோ - புதிய வரிகளை அமல்படுத்தவும், ஏற்கனவே உள்ள வரிகளை உயர்த்தவும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
சொத்து வரி உயர்வு மூலம் - குறைந்தது ஒரு கோடி ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சி, கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலே - புதிய வரிகளை அறிமுகம் செய்யாமல், உள்ள வரிகளை உயர்த்தாமல் - ஒரு கோடி ரூபாய்க்கு மேலும் நிதி திரட்டலாம்.
// தொழிற்சாலைகள் மீது உட்பட ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரியினை, லஞ்சம் பெற்றுக்கொண்டு, நகராட்சி அதிகாரிகள் - குறைவாக காண்பிப்பதை நிறுத்தினாலேயே, புதிய வரிகள் அறிமுகம் / வரி உயர்தலுக்கு அவசியம் இருக்காது.
// அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து - நகராட்சியின் மூலம் விடப்படும் ஒப்பந்தப்புள்ளிகளில் அரங்கேற்றும் மோசடிகளை நிறைவுக்கு கொண்டுவந்து, நகராட்சியின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் eTENDER மூலம் மட்டுமே பெறப்படும் என்ற முடிவுக்கு வந்தால் - பொது மக்களின் வரிப்பணம், பல லட்சம் பாதுகாக்கப்படும்.
// நிரந்தர துப்பரவு பணியாளர்கள் இருக்க, தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட 50 துப்பரவு பணியாளர்கள், டெங்கு பணிக்கு என எந்த வழிமுறையையும் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தினாலேயே - மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் மீதியாகும்.
// போதிய குடிநீர் விநியோகம் இருந்தும், அரசியல் வாதிகள் / அதிகாரிகள் லாபம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில், தனியார் லாரிகள் மூலம், மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினாலேயே - மக்கள் வரிப்பணம், பல லட்சம் மிச்சமாகும்.
// தெரு விளக்கு பராமரிப்பு என்ற பெயரில், அளவுக்கு அதிகமாக ஒப்பந்தப்புள்ளி கட்டணத்தை நிர்ணயம் செய்து - மக்கள் வரிப்பணத்தை சீரழிக்கும் நடவடிக்கையை நகராட்சி தடுத்தாலே, மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் மிச்சமாகும்.
// வாகனங்கள் பராமரிப்பு என்ற பெயரில், எரிவாயு செலவீனங்களில் - சீரழிக்கப்படும் பல லட்சங்களை மீட்டாலே, வரி உயர்வு எதுவும் அவசியமாகாது.
// ஏழை, எளிய மக்களுக்கு உதவிட அறிமுகம் செய்யப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மூலம், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லாபமடைய வீணடிக்கப்படும் பல லட்ச ரூபாயினை மீட்டாலே - எந்த வரி உயர்வும் அவசியமில்லை.
மேலுள்ள காரணங்களுக்காவும், இதையும் தவிர பல காரணங்களுக்காகவும், காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
[முற்றும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 8, 2018; 10:00 am]
[#NEPR/2018110801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|