இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் முதல் நாள் முதல் 12ஆம் நாள் வரை, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பள்ளிகளிலும், பெண்கள் தைக்காக்களிலும் – நபிகளார் புகழோதும் மவ்லித் மஜ்லிஸும், சில பள்ளிகளில் கூடுதலாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், மத்ரஸாக்கள் - பொதுநல அமைப்புகள் சார்பில் ஸலவாத் மஜ்லிஸ், சன்மார்க்கப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதும், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் அவற்றில் திரளாகக் கலந்துகொள்வதும் வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, சிறுபள்ளி, பெரிய பள்ளி, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஜாவியா, புதுப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் நடப்பாண்டு மவ்லித் மஜ்லிஸ் நிகழும் நவம்பர் மாதம் 09 முதல் 20ஆம் நாள் வரை நாள்தோறும் மஃரிப் தொழுகைக்குப் பின் - 18.30 மணியளவில் துவங்கி, 20.30 மணியளவில் நிறைவுற்றது.
ரபீஉல் அவ்வல் 12ஆம் நாள் முன்னிரவான நவம்பர் 20ஆம் நாள் இரவில், குருவித்துறைப் பள்ளி – ஒளிவிளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டிருக்க - மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சிறப்புரையாற்றினார். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
அனைத்து நாட்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ நன்றி கூறினார்.
|