சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி மழலையர் உட்பட அனைவருக்குமான பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 57-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த 16-11-2018 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ரியாத் யான்பு ரோட்டில் உள்ள (குறைஷ் ரோடு - Kuraish Interchange அருகில்) இஸ்திராஹவில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
வரவேற்பு:
காலை 10.00 மணியில் இருந்தே உறுப்பினர்கள் பத்ஹா - லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தமது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் வந்து சேர்ந்தனர். வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்கள்.
விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளுக்கான ஆயத்த வேளைகளில் வெளியரங்க விளையாட்டு மைதானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று குத்பா உரையில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
பொதுக்குழு கூட்டம்:
மன்ற 57-வது பொதுக்குழுக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்குத் துவங்கியது. நிகழ்ச்சிகளைச் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தொகுத்தளித்தார். மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் ஸாலிஹ் அவர்கள் மகன் இளவல் ஆதில் அவர்கள் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
மன்றத்தின் தலைவர் சகோதரர் PMS முஹம்மது லெப்பை அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்றார். இந்த பொதுக்குழுக் கூடத்தில் நம் அனைவரையும் ஒன்றுகூடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டு, மிகவும் குறுகிய காலத்தில் இந்தக் குடும்ப சங்கம நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து முடித்த செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது பாராட்டினை தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து எமது மன்றத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கம் அளித்தார். RKWA-வின் முக்கிய செயல்திட்டங்களான மருத்துவம், கல்வி மற்றும் சிறுதொழில் சார்ந்த விணப்பங்கள் பெறப்பட்டு அவற்றை ஷிஃபா மற்றும் இக்ரா கல்வி சங்கம் மூலம் பயனாளர்களுக்கு நிதி வழங்கிடும் முறை பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதுமட்டும் அல்லாது, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், பெருநாளன்று இரவு நாட்டுக் கோழி வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், இமாம் மற்றும் முஅத்தீன்களுக்கு பெருநாளில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects, பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் Women And Kids Fund (WAKF) ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார்.
கருத்துரை:
மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினருமான சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தமது கருத்துரையில் நாம் சம்பாதிப்பதில், நமதூரில் உள்ள ஏழை எளிய மக்களின் ஹக்கும் உள்ளது என்பதைச் சுட்டி காட்டினார். RKWA-வின் செயற்குழு உறுப்பினர்களின் நகர்நலன் சார்ந்த பணிகள் சிறக்க இறைவினிடம் பிராத்திக்குமாறு வேண்டிக்கொண்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவாராது தங்களின் சந்தாக்களை உரிய நேரத்தில் செலுத்துவதின் மூலம் நலத் திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்த முடியும் என்றார். மேலும் நமது சமுதாயத்தின் ஒற்றுமை, குறிப்பாக நமதூர் இயக்கங்களின் ஒற்றுமை பற்றியும், தலைமைக்கு கட்டுபடுதல் பற்றிய அறிவுரைகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்களுமான சகோதரர் நுஸ்கி மன்ற துணை தலைவர் சகோதரர் கூஸ் அபூபக்கர் ஆகியோர் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்:
அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோதரர் அஹ்மத் ஜலீல், மன்ற செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஜைத் மிஸ்கீன் அவர்களது தந்தை ஜனாப் கரூர் அபுல் ஹசன், மன்ற முன்னாள் தலைவர் சகோ. நூஹு அவர்களின் தாய் மாமா ஜனாப் ஹாமித் யூசுப் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சகோ. ஜகரியா அவர்களின் மாமா ஜனாப் உவைஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மன்ற செயல்பாடுகளை பாராட்டி, உறுப்பினர்கள் அனைவரது ஹக்கில் துஆ செய்தார்.
குறிப்பாக அதிரை பைத்துல்மால் செயலாளர் அஹ்மத் ஜலீல், RKWA-வை முன்னோடியாகக் கொண்டு துவங்கப்பட்ட அதிரை பைத்துல்மால் பற்றிய அறிமுகவுரை ஆற்றினார்.
சிறப்புரை:
மௌலவி M.M. நூஹு அல்தாஃபி அவர்கள் தர்மம் செய்வதின் சிறப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.
“தர்மம்” என்பதற்கு எடுத்துக்காட்டு “RKWA” என்றும், உறுப்பினர்கள் வழங்கும் ஒவ்வொரு ரியாலும் சரியான பயனாளர்களுக்கு சென்று அடைவதாகவும் அதற்கான நற்கூலியை இறைவன் நமக்கு வழங்குவான் என்றும், மேலும் “RKWA” மற்ற மன்றங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் கூறினார். தர்மம் செய்வதை இறைவன் என்றும் குறைத்து மதிப்பிடுவதில்லை, மாறாகத் தர்மம் செய்பவர்களை மேன்மேலும் வளர்ச்சி அடையச் செய்கிறான். ஏழ்மையின் நிலையில் கூட சஹாபாக்கள் தர்மம் செய்து இருப்பதாகச் சுட்டி காட்டினார்கள். தர்மம் கொடுப்பதின் மூலம் தங்களை நரகத்தில் இருந்து தற்காத்து கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் அவர்கள் கூறியதை நினைவூட்டினார்கள்.
நன்றியுரை:
குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த இனிய பொதுக்குழு கூட்டத்தை சீரிய முறையில் நடத்த அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர்கள், பெண்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த சகோதரிகள், உணவு, குடிநீர், தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவற்றுக்கு தாராளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், தம்மாம் மற்றும் கஸீமில் இருந்து வந்து கலந்து கொண்ட அனைவர்களுக்கும் செயற்குழு உறுப்பினர் சகோதரர் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் நன்றி கலந்த பாராட்டுக்களைக் கூற, துஆ, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
கேக்:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ. இப்ராஹீம் பைசல் அவர்களுடன் பணிபுரியும் சவூதி பிரஜை சகோ. பதர் அல்-ராஷித் அவர்கள் நமது மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டிப் பரிசளித்த மன்ற இலச்சினை பதித்த அழகிய கேக் தனை நமது மன்ற தலைவர் சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் கையால் வெட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எம்மன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாக கேக் வழங்கிய சகோதரருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
காயல் களரி சாப்பாடு:
மதிய உணவாகக் காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களரி கறி, கத்தரிக்கா மாங்காய் புளியாணம் பரிமாறப்பட்டது.
இச்சுவைமிக்க களரி சாப்பாடு எம்மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் சகோ. மொகுதூம், சகோ நுஸ்கி மற்றும் சகோ உவைஸ் ஆகியோர் தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர். எம்மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சகோ. தீபி அவர்களின் அனுசரணையில் சுவை மிக்க ஐஸ்கிரீம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெவ்வேறு இடங்களில் தயாரிக்க பட்ட உணவுகளை உரிய நேரத்தில் இஸ்திராஹாவிற்கு கொண்டு வந்து சேர்த்த சகோ. முஹம்மது அவர்களுக்கு பிரத்தியேகமாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
குர்ஆன் கிராஅத் போட்டி:
மௌலவி M.M. நூஹு அல்தாஃபி அவர்கள் குர்ஆன் கிராஅத் போட்டியினை நடத்தினார்கள். போட்டியில் சிறுவர் சிறுமியர் ஆவலுடன் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகள்:
அஸர் தொழுகைக் கூட்டாக நிறைவேற்றிய பின் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் உறுப்பினர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சகோ. இப்ராஹீம் பைசல், சகோ இர்ஷாத், சகோ. சூஃபி, சகோ. ஆதில் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சகோ. கோடக்கா பைசல் அஹமத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சிறுவர் / பெரியவர் போட்டிகள்:
பெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில் Aim and Kick, Lemon and Spoon, Pizza Corner ஆகிய போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. மக்ரிப் நேரம் நெருங்கியதும் கூட்டாக தொழுகை நிறைவேற்றியபின் விளையாட்டு போட்டிகள் மின்னொளியில் தொடர்ந்து நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் மற்றும் சமூசாவுடன், மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ. உவைஸ் அவர்கள் தயார்செய்த காயல் ஸ்பெஷல் தேநீர் வழங்கப்பட்டது.
மறுபுறம், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. Running Race, Fill the Water Bottle, Balloon Fight போட்டிகளில் சிறுவர்கள் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர்.
பெண்கள் / சிறுமியருக்கான போட்டி:
பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைந்துள்ள தனி அரங்கில் பெண்கள் மற்றும் சிறுமியர்க்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. இந்தப் போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர்.
விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இனிதாக நிறைவுற்ற பின் கூட்டாக இஷா தொழுகை நிறைவேற்றப்பட்டது.
உள்ளரங்கு விளையாட்டு:
வெளியரங்க போட்டிகள் நிறைவுற்றபின் உள்ளரங்க நிகழ்ச்சிகள் துவங்கியது, சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் எண்கள் வைத்து விளையாடும் “BINGO” விளையாட்டைச் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் அவர்களுடன் இணைந்து நடத்தினார்கள்.
பரிசளிப்பு விழா:
போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
இரவு உணவு:
இரவு உணவாகக் கோழி சால்னாவுடன் பரோட்டா, இடியாப்பம் மற்றும் சவ்வரிசி பரிமாறப்பட்டது. இச்சுவைமிக்க கோழி கறி மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ நுஸ்கி மற்றும் மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ. உவைஸ் தலைமையில் சிறப்புறத் தயார் செய்திருந்தனர்.
வினாடி வினா போட்டி:
செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் ஏற்பாட்டில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இத்துடன் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்கு விடைபெற்றுச் சென்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
மேலதிக புகைப்படங்களை காண கீழே சொடுக்கவும்
1) https://drive.google.com/open?id=1zy_JWtJgN6jWLcAlVtKu_H3Qpt1HzINb
2) https://drive.google.com/open?id=15Sp3urOPAoh5rldYZoVMT4ua9X44Vriv
3) https://drive.google.com/open?id=1AxqpJsOKiMvbntXdRIPeAmXSJWHVmWkX
4) https://drive.google.com/open?id=1lk8XYGT8B4cVZnlRYG28ceh1oBT-5tW5
5) https://drive.google.com/open?id=1Hy_ueUQki5gEFcHkahNqQFe2LCMbV4fn
6) https://drive.google.com/open?id=1JgMI3mULuuxVZfZtSnXIZL3ILwUgHRyr
7) https://drive.google.com/open?id=1A57DyginAJTb93HNwjY6qzNHM2V8brYC
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
|