காயல்பட்டினத்தில் இ-பொது சேவை மையத்தை பேருந்து நிலைய வளாகத்தில் விரைந்து அமைத்திட, காயல்பட்டினம் நகராட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் - அரசு கேபிள் டிவி நிறுவனம் பராமரிப்பில், இயங்கிவந்த இசேவை மையம் திடீரென, புதிதாக துவக்கப்பட்ட ஏரல் தாலூக்காவிற்கு - செப்டம்பர் மாதம் - மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, சென்னையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு செயலர் டாக்டர் சந்தோஷ் பாபு IAS மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜான் லூயி IAS ஆகியோரை, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் நேரடியாக சந்தித்தனர்.
அதன் பயனாக , அரசு கேபிள் நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட தாசில்தார் - காயல்பட்டினம் வருகைபுரிந்து, பேருந்து நிலையம் வளாகத்தில் (தற்போது ஆதார் மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே), மீண்டும் இ சேவை மையத்தை அமைக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், இதற்கான உத்தரவையும் உடனடியாக வழங்கியது.
இருப்பினும் - பேருந்து நிலைய இடத்தில், தனிக்கதவு, தடுப்பு சுவர் போன்ற சில பணிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது என நகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இ சேவை மையம் மீண்டும் துவக்கப்பட காலதாமதம் ஆகிவருகிறது.
இந்த பணிகளை விரைவில் முடித்து, இ சேவை மையம் மீண்டும் இயங்கிட ஆவனம் செய்திடக்கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2018; 2:30 pm]
[#NEPR/2018112603]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|