செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 115 வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய நிகழ்வின் விபரம் வருமாறு:
செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தில் 115-வது செயற்குழு கூட்டம் சென்ற 02/11/2018, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு இம்மன்றதின் தலைவர் சகோ.குளம்.எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்க, சகோ. ஷேக் அப்துல்லாஹ் இறைமறை ஓத, சகோ. எஸ்.ஹச். அப்துல்காதர் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
மன்றத்தின் தலைவர் சகோதரர் குளம் எம் ஏ. அஹ்மது முஹியத்தீன் தனதுரையில் இம்மன்றம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்துவிட்டது, இம்மன்றம் ஆரம்பம் முதல் நம் ஊர் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் பொருட்டு சேவையாற்றி வருவதுடன், கல்லாமை இல்லாமை ஆக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், இம்மன்றத்தின் செயலாளராக இருந்த நம்மூர் மண்ணின் மைந்தன், கடையநல்லூர் எம். எல். ஏ. அன்பு சகோதரர் அபூபக்கர் அவர்களின் முயற்சியில் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக இக்ரா தோற்றுவிக்கப்பட்டு இன்றுவரை எத்தனையோ மாணவக் கண்மணிகளுக்கு உதவி செய்து வருகிறது. மேலும், காயல் நல மன்றங்களின் மூலம் ஷிபா என்ற மருத்துவ கூட்டமைப்பை ஏற்படுத்தி, ஏழை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதுவெல்லாம் ஒரு தனிநபரால் செய்ய சாத்தியப்படாது, அத்தனையும் மன்ற உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடை மூலமே நடந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. என்று இந்த மன்றத்தின் சேவைகள், செயல்படும் முறை மற்றும் நாம் இதுவரை வழங்கிய தொகை அதனால் பயன்பட்ட எண்ணற்ற பயனாளிகள் ஆகியவற்றை அழகான முறையில் விளக்கி வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுக உரையாற்றி அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே. செய்யது மீரான் முஜம்மில், கடந்த செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகளையும், நிறைவேற்றிய தீர்மானங்கள், மற்றும் வந்திருந்த சிறப்பு அழைப்பார்களுக்கு மன்றம் இது வரை சிறு தொழில், கல்வி மற்றும் மருத்துவத்திற்கென வழங்கிய மொத்த தொகை, பயன் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை இவைகள் அடங்கிய பட்டியலை அவர்கள் பார்வைக்கு வழங்கினார். வருடம் இரு முறை பொதுக்குழு நடை பெறுவதையும் கோடிட்டு காட்டி, நோன்பு காலங்களில் இஃப்த்தார் நோன்பு திறப்பு நிகழ்வாக நம் காயலர்கள் ஓன்று கூடி, அனைவரும் நம் ஊர் மக்களின் நலனுக்காக மனமுவந்து அள்ளிவழங்கும் அந்த நிகழ்வுதனையும், காயாளர்கள் சங்கமம் என்று இஸ்திரஹா ஓய்வில்லத்தில் விளையாட்டு நிகழ்வுடன் பொதுக்குழு நடைபெறும், அந்த இனிய நிகழ்வுகளையும் இங்கே வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அறிய தந்தார். அதன் பிறகு மன்றத்தின் மூலம் நடந்தேறிய பணிகளின் நிகழ்வினை அறிக்கையாக சமர்ப்பித்து அமர்ந்து கொண்டார்.
நம் காயல் மக்கள் எங்கெல்லாம் பரந்துவிரிந்து இருக்கின்றார்களோ அங்கெல்லாம் ஒரு குழுவாகவே இருந்து, நமது ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டார்கள். அப்பேர்பட்ட வழி வம்சத்தில் வந்தவர்கள் தான் நாம், எனவே தான் இன்றும் நம் மக்களுக்கு பல சேவைகளை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் நம் அனைவருக்கும் மேலோங்கி நிற்கிறது. அந்த அடிப்படையில்தான் உலக காயல் நல மன்றங்கள் தோன்றி இன்று சேவையாற்றி வருகிறது. அப்படி சேவை எண்ணத்துடன் துவங்கப்பட்ட இந்த மன்றத்தில் எத்தனையோ கொள்கை கோட்பாடுகளை கொண்டவர்கள் இருக்கிறார்கள். பல அரசியல் கட்சி உடைய பின்னணியில் இருக்கின்றார்கள் இருந்தாலும், அத்தனையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வசதியற்ற நம் ஊர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இங்கே கூடி ஒற்றுமையாக பிரிந்து செல்கின்றோம். இதுவே மற்ற மன்றங்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. எல்லாமே ஒரு கூட்டு முயற்சியில் தான் இவ்வளவு தொகைகளையும் நம்மால் வழங்க முடிகிறது. நமது மார்க்கமும் கூட்டாக செயல்படுவதை தான் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள இந்நாட்டின் கால சூழ்நிலையிலும் நம்மூர் ஏழை மக்களின் துயர் துடைக்க வேண்டும், என்ற நல்ல நோக்கத்துடன்தான் இங்கே வந்து கலந்து செயல்படுகின்றார்கள். என்று எடுத்துக் கூறியதுடன், புனித உம்ரா கடமையை நிறைவேற்ற வந்த இடத்தில், எங்கள் அன்பு அழைப்பினை ஏற்று வந்து கலந்து சிறப்பித்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நன்றியும் துஆவும் செய்து தனது உரையை நிறைவு செய்தார். மன்றத்தின் செயலாளர். சகோ.எம்.ஏ. செய்யது இப்ராஹிம்.
நிதி நிலை:
மன்றத்தின் தற்போதைய இருப்புதொகை, பயனாளிகளுக்கான உதவிகள் மற்றும் கல்விக்கென ஒதுக்கிய தொகை போன்ற நிதி நிலைகளை மிக விளக்கமுடன் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், மன்றத்தில் வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் அறியத் தந்தார்.
மருத்துவ உதவிகள்:
உலக காயல் நலமன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா அறக்கட்டளை மூலமாக வந்திருந்த மனுக்கள் மன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பார்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, நீரழிவு தொடர் சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை என மூவர், சிறுவனுக்கு விபத்தில் எலும்பு முறிவு, சிறுநீர் பையில் தொற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் காது அறுவை சிகிச்சை என எட்டு பேரும், கல்விக்கென வந்த மனுவில் (Engineer) பொறியாளர் பயிலும் இருவர், (B.Ed,) ஆசிரியர் பயிலும் இருவர் என் நான்கு பேருக்கும் ஆக மொத்தம் பயன் பெற்ற பயனாளிகள் பனிரெண்டு காயல் சொந்தங்களுக்கு உதவிகள் வழங்க உறுப்பினர்கள் அனுமதியுடன் உறுதி செய்யப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களின் உரை:
உங்களது நிகழ்ச்சிகளை நான் உற்று நோக்கிய போது, எல்லோரும் ஒற்றுமையாக கொள்கை பார்க்காமல் அரசியல் கலப்பில்லாமல், ஏற்றத்தாழ்வு பாராமல், எல்லோரும் சமத்துவமாக, செயல்படுவது பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. இது போன்று கடைசிவரை ஒற்றுமையாக இருந்து நம்மூர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இறைவன் நீண்ட ஆயுளுடன் வளமான வாழ்வு உங்களுக்கு தருவான் என்ற துஆவுடன் தொடர்ந்து, பல விடயங்களில் முன்னோடியாக இருந்து வருவதையும் காணமுடிகிறது. அந்த காலத்திலே நம் முன்னோர்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் சேவை செய்யும் மனப்பாங்குடன் இருந்து வந்தார்கள் யார் சென்றாலும் தங்க வைத்து விருந்துபசாரம் செய்வதிலும் சரி, ஆதரிப்பதிலும் சரி, அதுபோன்று தொன்றுதொட்டு வரக்கூடிய நாமும் அந்த பண்பாட்டிலே வருகின்றோம். இதை நாமும் செய்வதுடன் நம் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். இங்கே இக்ரா, ஷிபா தோன்றிய வரலாறு கண்டேன். அதன் மூலம் தாங்கள் சேவையாற்றுவதை அறிந்து பெருமிதம் கொள்கின்றேன். கல்வியில் ஆண் பெண் இருவர்களும் சிறந்து விளங்கவேண்டும். கணவன் விரும்பினால் வேலைக்கு செல்லலாம். இங்கே வந்து கலந்து கொண்டது ஏதோ நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு வருகின்றது. எனவே உங்களுடைய சேவைகள் தொடர வேண்டும் உங்களுக்கு தொழிலில் அபிவிருத்தியும் வேலையில் பதவி உயர்வும் பெற்று எந்தவிதமான பிரச்சினைகள் இங்கே வந்து விடாமல் நல்ல முறையில் தொடர்ந்து பணியாற்றி வர இறைவனிடம் இறைஞ்சுகின்றேன். என்று தனது உரையை நிறைவு செய்தார், சகோ.ஹாஜி. வாவு எம்.எம். முஹ்தஜீம்.
அல்ஹாஜ் வாவு செய்யது அப்துல்ரஹ்மான் அவர்கள் உரையாற்றும்போது உறுப்பினர்கள் யார் யார் என்பதை முதலில் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றார். அதன்படி உறுப்பினர்கள் அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். அதன்பின் சுருக்கமாக தனது கருத்துகளை முன்வைத்தார். இந்த மன்றத்தின் சேவைகள் அனைத்தும் என்னை மனம் குளிர வைக்கிறது நம் மூதாதையர்கள் செய்துவந்த பணிகளை இன்று நீங்கள் தொய்வின்றி தொடர நினைக்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இங்கே கல்விக்காக வந்த மனுக்களுக்கு தாங்கள் உதவுவதை அறிந்தேன். அதில் பெண்கள் சிலர் பொறியாளர் படிப்பதற்கு தாங்கள் கல்வி உதவி செய்கிறீர்கள். இப்போதுள்ள கால சூழ்நிலையில் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும் இருப்பினும் பெண்கள் தங்களது கணவனுக்கு செயலாளராக செயல்பட்டு, தன் பிள்ளைகளுக்கு ஆசிரியையாக இருந்து குடும்ப நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தி செல்வது சாலச் சிறந்தது. பெண்கள் வேலைக்கு செல்வது எனக்கு இஷ்டமில்லை, கணவனுக்கு சேவை செய்வதையே நான் விரும்புகின்றேன். கணவன்மார்கள் இஷ்டப் பட்டால் அவர்கள் வேலை செய்யலாம் அதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை அது அவர்கள் இஷ்டம், என்று கூறியதோடு இந்த மன்ற செயல்பாடுகள் சிறந்த பணியை பாராட்டி, தான் கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பாத்தியத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற உறுப்பினர்களுடைய உதவும் மனப்பான்மையை எண்ணி வியந்து இது தொடர வேண்டும், இன்னும் நம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்று பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
நல்ல ஒரு அருமையான இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தந்த மன்றத்திற்கு நன்றி கூறி, புனித உம்ரா கடமையை நிறைவேற்றி நம் ஊர் மக்களுக்காகவும், நமது சமுதாயத்திற்காக, நமது நாட்டினுடைய முஸ்லிம்கள், உலக முஸ்லிம்கள் யாவரின் பாதுகாப்பிற்காகவும் உள்ளம் உருகி புனித இறை இல்லத்தில் வைத்து துஆ கேட்டோம். அல்லாஹ் கேட்ட துஆவை கபூல் செய்வானாக ஆமீன் என்று தொடர்ந்து, உங்களின் முந்திய தலைமுறையுடன் அப்போதிருந்தே நான் ஊருக்காக பணியாற்றி வருகின்றேன் இங்கே இருக்கும் இவர்களுடைய தந்தைமார்கள் சிலருடன் சேர்ந்து நான் சிறுவனாக இருந்தபோது, ஊருக்காக பொதுச் சேவைகளை செய்து வந்தவன். நீங்கள் ஆற்றும் இந்த பணியை நான் இங்கு அவதானித்தபோது, நம்மூர் ஏழை எளிய மக்களுக்காக இப்போது உடனே ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. இதை பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது நமது ஊருக்காக ஆற்றும் உங்களது பணி மிகச் சிறப்பான பணி அதிலும் குறிப்பாக இந்த ஜித்தா காயல் நற்பணி மன்றம், உலக காயல் நல மன்றங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. எந்தக் கொள்கை வேறுபாடும் இல்லாமல் எந்த இயக்கத்தின் சாயலும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து ஆலோசித்து எடுக்கும் முடிவுகள் மிகவும் போற்றுதலுக்குறியது. இத்தனை ஆண்டுகளாக தாங்கள் உழைத்து சம்பாதித்த தொகையிலிருந்து நமது ஊர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், கல்விக்காகவும் ஒரு பெரிய தொகையை வழங்கியிருப்பதை இங்கே காண முடிகிறது. இது சாதாரணமான ஒன்றல்ல, எத்தனையோ குடும்பங்களை வாழ வைக்கின்றீர்கள். இது இறைவனுக்காக நீங்கள் செய்யும் சதக்கத்துல் ஜாரியா, இது ஒரு நிரந்தரமான நன்மைகளை உங்களுக்குப் பெற்றுத் தரும். நம் ஊருக்காக எங்கிருந்தாலும் சேவை செய்ய வேண்டும், நம்முடைய பார்வை நம் ஊரை நோக்கி இருக்க வேண்டும், சங்கம் வைத்து சேவை செய்ய வேண்டும் என்பதல்ல, தனிப்பட்டமுறையிலும் எல்லோரும் உதவி செய்யலாம். மேலும், மக்கள் மருந்தகம் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் தந்தாலும் மக்கள் அதை யாரும் வாங்க முன்வருவதில்லை காரணம் சரியான விழிப்புணர்வு இல்லை, அதை இம்மன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் அரசாங்கத்திலிருந்து சிறுபான்மையினருக்கு தரக்கூடிய உதவிகளை நாம் எல்லோரும் பெற வேண்டும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இப்போதுள்ள இந்த நாட்டின் சூழ்நிலையில் வேலை வாய்ப்புகள் குறைவதாக தெரிகிறது, அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது ஆகையால் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் உதவுவது போல் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை மற்ற நாடுகளில் ஏற்படுத்தி தர உலக காயல் மன்றங்களுடன் சேர்ந்து வழிகாட்ட வேண்டும். என்று நல்ல ஆலோசனை வழங்கியதோடு இம்மன்றத்தின் சேவைகளை பாராட்டி தொடர்ந்து இதுபோன்று நல்லவிதமாக செயல்பட பிரார்த்தனையோடு தனது உரையை நிறைவு செய்து அமர்ந்தார் சகோ. காயல் மகபூப்.
கலந்துரையாடல்:
மன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் நல்ல பல கருத்துக்கள் பகிரப்பட்டன. மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களின் ஆலோசனையும், கருத்துக்களையும் செவி சாய்த்து கேட்டனர். நமதூர் மக்களுக்கு நல்ல பல நலப்பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்திட உறுப்பினர்கள் முன் வர வேண்டிய காலத்தின் கட்டாயத்தையும் அவசியம் உணர்ந்து செயல் பட வேண்டியது. போன்ற அழகிய கருத்துக்களையும் உறுப்பினர்கள் பதிவாக்கினர்.
தீர்மானங்கள்:
1. புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற வந்திருந்த, முன்னாள் நகர் மன்ற தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தலைவருமாகிய அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துற்ரஹ்மான், கல்லுரியின் செயலாளர் மற்றும் கே.எம்.டி.மருத்துவமனையின் உப தலைவருமாகிய சகோ.வாவு எம்.எம். மொஹுதஜீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சகோ.காயல் மகபூப் ஆகியோர் மன்ற உறுப்பினர்களின் அன்பு அழைப்பினை ஏற்று இந்த செயற்குழுவில் வந்து கலந்து சிறப்பித்தமைக்கு மன்றம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுக்களத் தெரிவிக்கின்றது.
2. இம்மன்றத்தின் அடுத்த 116 - வது செயற்குழுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07/12/2018 வெள்ளிக்கிழமை மஃரிபுக்குப் பின் இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெறும்.
நன்றி நவிலல்:
சகோ. அரபி எம்.ஐ.முஹம்மது சுஐபு பங்கேற்ற அனைவருக்கும், குறிப்பாக சிறப்பு விருந்தினர்களுக்கும் மற்றும் அனுசரணை வழங்கியவருக்கும் மனதார நன்றி நவில, சகோ.பிரபு எஸ்.ஜே. நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
2.11.2018.
|