திருநெல்வேலி – திருச்செந்தூர் வழிடத்தடத்தில் இரவு நேரத்தில் கூடுதல் பயணியர் வண்டியை இயக்கிட ரயில்வே துறையிடம் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. அக்கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்திடவும் குழுமம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில், ஆறு பயணியர் வண்டிகளை தென்னக ரயில்வே தினமும் இயக்குகிறது.
திருச்செந்தூரில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு, பயணியர் வண்டி இல்லை.
அது போல - திருநெல்வேலியில் இருந்து மாலை 6:35 க்கு பிறகு பயணியர் வண்டி இல்லை.
இதனால் - இந்த மார்க்கத்தில் உள்ள நகரங்களில் தங்கள் பணிகளை முடித்துக்கொண்டு, இரவு நேரங்களில் வீடு திரும்ப முயலும் பயணியர் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே - இரவு 8:30 அளவில், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விதமாக, புதிய பயணியர் வண்டியினை அறிமுகப்படுத்திட கோரி - மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல், மத்திய ரயில்வே வாரிய தலைவர் திரு அஷ்வானி லோஹானி, தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு குல்ஷரேஷ்தா, மதுரை கோட்ட மேலாளர் திருமதி நீனு இட்டியேராஹ் ஆகியோரிடம் மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி - திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்க சுற்றுவட்டார பகுதிகளில், விரைவில் கையெழுத்து வேட்டை துவக்கிடவும், மெகா | நடப்பது என்ன? குழுமம் திட்டமிட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2018; 9:30 am]
[#NEPR/2018112601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |