காயல்பட்டினம் நகரின் பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலவாறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, தமிழில் ‘காயல்பட்டினம்’ என்றும், ஆங்கிலத்தில் ‘KAYALPATTINAM’ என்றும் மட்டுமே பயன்படுத்திட ஆவன செய்திடுமாறு, மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால், சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படும் [சான்றாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுதல்] என்று அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் தமிழக அரசால் உயர்நிலைக்குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வரசாணையில், தமிழ் நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட ஆவணங்களின் அடிப்படையிலும், ஊர்ப் பொதுமக்களின் தீர்மானங்கள், கோரிக்கைகளின் அடிப்படையிலும், ஊர்ப்பெயர்களைப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாணையினை செயற்படுத்தும் வகையில், ஊர்ப்பொதுமக்கள், தமிழறிஞர்கள் - தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கில உச்சரிப்பும் அமையப் பெறாத ஊர்களின் பெயர்ப்பட்டியலை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ விரைவில் அளித்திடுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி அண்மையில் அறிவித்திருந்தார்.
காயல்பட்டினம் நகரின் பெயர் தமிழில் -
‘காயல்பட்டினம்’ என்றும்,
‘காயல்பட்டணம்’ என்றும் எழுதப்படுகிறது.
அது போல - காயல்பட்டினம் நகரின் பெயர் ஆங்கிலத்தில் -
kayalpattinam என்றும்,
kayalpatnam என்றும்,
kayalpattanam என்றும் எழுதப்படுகிறது.
கடற்கரையில் அமைந்துள்ள நகரங்களை ‘பட்டினம்’ என்றே சொல்லவேண்டும் என மொழி வல்லுநர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.
[பார்க்க: மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன்]
http://www.valaitamil.com/language-training-17-tamil-language-speaking-of-accuracy-and-written-kavikko-gnanaccelvan_9382.html
மேலும் - இந்திய ரயில்வே துறை, KAYALPATTINAM என்ற எழுத்துக்கோர்வையே பயன்படுத்துகிறது. மக்கள் கணக்கெடுப்பு துறையும் ஆங்கிலத்தில், KAYALPATTINAM என்ற எழுத்துக்கோர்வையே பயன்படுத்துகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளும் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட), KAYALPATTINAM என்ற எழுத்துக்கோர்வையே பயன்படுத்துகின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு - தமிழில் காயல்பட்டினம் என்றும், ஆங்கிலத்தில் KAYALPATTINAM என்றும் - நம் நகர் பெயரினை ஆவணங்களில் பயன்படுத்திட உத்தரவிட கோரி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2018; 12:15 pm]
[#NEPR/2018112602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|