காயல்பட்டணம்.காம் இணையதளம் இருபது ஆண்டுகளை எட்டியதை முன்னிட்டு, இரு வேறு சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2018 அன்று
காயல்பட்டினம் ஹனியா சிற்றரங்கத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை
கீழே:
இணையத்தில் காயல் (Kayal on the Web) எனும் பெயரில் டிசம்பர் 1998இல் உதயமான காயல்பட்டணம்.காம்
(KAYALPATNAM.COM) இணையதளம், 2006ஆம் ஆண்டு முதல் “தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் (The Kayal First Trust)
அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.
ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேலாக பக்கப்பார்வைகளைப் பெற்ற இந்த இணையதளம், இறைவன் நாடினால் - எதிர்வரும் டிசம்பர் 19 அன்று தனது
இருபது வயதை பூர்த்தி செய்கிறது. எல்லாபுகழும்இறைவனுக்கே!
இத்தருணத்தை கொண்டாடும் விதமாக, இரு வேறு சிறப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
காயல்பட்டினம் ஹாஜியப்பாபள்ளி எதிரில் உள்ள துஃபைல் வணிக வளாகம் முதல் மாடியில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கத்தில்,
காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை - இறைவன் நாடினால் - நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள
திரு எம்.விநாயக சுப்ரமணியன் (APO, Housing and Sanitation, DRDA, Thoothukudi) இசைவு தெரிவித்துள்ளார்.
வெளியிடப்படும் நூல்களின் விபரம்:
(1) தென்கோடிஅலைகள்
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - எழுத்துமேடை பகுதியில் வெளியான 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைத்
தொகுப்பு.
அரபு, தமிழ், அரபுத்தமிழ் மொழிகளில் விற்பன்னர்களான கவிஞர்கள், பலவர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், நூல் தொகுப்பாளர்கள் என்ற நமது
காயல்பதியின் நெடிய மரபின் மேல் மணல் குன்று போல காலம் மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சிறு நுனியைத் தீண்டுவதின் வழியாக பண்டைய
ஞான மரபை மீட்டிடும் எளிய முயற்சி எனவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
(2) வடகிழக்கிந்தியப்பயணம்
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், 2018ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாளை பஷீரின் தொடர் பயணக்கட்டுரைகளாக வெளியான ஆக்கங்களின்
தொகுப்பு நூல் இது.
“சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் உற்ற நண்பரான ஃபழ்ல் இஸ்மாயீலுடனான ஒரு உரையாடலில், நான் இங்கேயிருக்கும் போதே
சிங்கப்பூர், மலேஷியா சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடுங்களேன் “ என்றார். செலவேறிய வானூர்தி பயணம், மாயையின் மீதும் தீரா நுகர்வின் மீதும்
கட்டப்பட்டிருக்கும் பெரிய ஷாப்பிங்மாலான சிங்கப்பூரின் மீதான ஒவ்வாமை என்ற இருகாரணங்களையும் காட்டி நான் சொன்னேன் , “எல்லா
எடத்தயும் பாக்கத்தாம்பா செய்யனும். அது நல்ல விஷயந்தான், ஆனா நாம இருக்குற இடந்தாம்பா சிங்கப்பூரும், மலேஷியாவும், மொத்த உலகமும்.
இந்தியாவுக்குள்ளயே பல வெளிநாடுகள் இருக்கும் போது இதமொதல்ல பாத்து முடிப்போம் என ஒரு வீறாப்பில் சொன்னேன்.
அந்த சொல்லானது வடகிழக்கு பயணம் என்ற மன விருப்பத்திற்கு மேல் போய் உட்கார்ந்து கொண்டது. அழுத்தம் தாங்காமல் வண்டி புறப்பட்டு
விட்டது.”
– நூலின் முதல் அத்தியாத்திலிருந்து...
அன்பு அழைப்பு!
சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, கீழுள்ள ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும்:
(1) எம்.எஸ். முஹம்மது சாலிஹு (98401 37302)
(2) சாளை பஷீர் ஆரிஃப் (99628 41761)
(3) எஸ்.ஏ. முஹம்மது நூஹு (78455 40490)
(4) எஸ்.கே. ஸாலிஹ் (89033 30440)
|