காயல்பட்டினம் நகராட்சியின் அனுமதி கிடைத்துவிட்டதால், பேருந்து நிலைய வளாகத்தில் இ-பொது சேவை மையம் விரைவில் அமைக்கப்படும் என - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேள் கூட்டத்தில் “நடப்பது என்ன?” குழுமம் அளித்த மனுவிற்கு மாவட்ட கேபிள் டீவி வட்டாட்சியர் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் - அரசு கேபிள் டிவி நிறுவனம் பராமரிப்பில், இயங்கிவந்த இசேவை மையம் திடீரென, புதிதாக துவக்கப்பட்ட ஏரல் தாலூக்காவிற்கு - செப்டம்பர் மாதம் - மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, சென்னையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு செயலர் டாக்டர் சந்தோஷ் பாபு IAS மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜான் லூயி IAS ஆகியோரை, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் நேரடியாக சந்தித்தனர்.
அதன் பயனாக , அரசு கேபிள் நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட தாசில்தார் - காயல்பட்டினம் வருகைபுரிந்து, பேருந்து நிலையம் வளாகத்தில் (தற்போது ஆதார் மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே), மீண்டும் இ சேவை மையத்தை அமைக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், இதற்கான உத்தரவையும் உடனடியாக வழங்கியது.
இருப்பினும் - பேருந்து நிலைய இடத்தில், தனிக்கதவு, தடுப்பு சுவர் போன்ற சில பணிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது என நகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இ சேவை மையம் மீண்டும் துவக்கப்பட காலதாமதம் ஆகிவருகிறது.
இந்த பணிகளை விரைவில் முடித்து, இ சேவை மையம் மீண்டும் இயங்கிட ஆவனம் செய்திடக்கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக திங்களன்று (நவம்பர் 26) கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவிற்கு - கீழ்க்காணும் பதில், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக நேற்று வழங்கப்பட்டது.
மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி இந்நகராட்சிக்குட்பட்ட பேருந்துநிலையத்தில் அமைந்துள்ள ஆதார் மையக்கட்டிடத்தில் பொது இ சேவை மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொறுப்பாளர் (கேபிள் டிவி தாசில்தார்), கீழ்க்காணும் பதிலை, நடப்பது என்ன? குழுமத்தின் மனுவிற்கான பதிலாக தெரிவித்துள்ளார்.
தங்களது மனு பரிசீலிக்கப்பட்டது. காயல்பட்டணம் நகராட்சி ஆணையாளரிடமிருந்து இ-சேவை மையம் அமைத்திட போதிய இடவசதி ஆதார் மைய கட்டிடத்தில் செயல்பட அனுமதி வரப் பெற்றுள்ளது. விரைவில் மேற்படி ஆதார் மைய கட்டிடத்தில் இ-சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2018; 4:30 pm]
[#NEPR/2018113002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|