பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அக்டோபர் 20, 2010 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 791 வாயிலாக, 13 தெருக்களில், SPECIAL ROADS PROJECT (SRP) என்ற திட்டத்தின் கீழ், சிமெண்ட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு - சுமார் 2 கோடி ரூபாய்.
சிமெண்ட் சாலை அமைக்க ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் - இது அப்போதைய ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரின் விருப்பம் எனவும், எனவே மறுக்க முடியாது எனவும் கூறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது - சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வர, சுமார் 5 மாதங்கள் மட்டுமே இருந்தது.
நவம்பர் 1, 2010 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவம்பர் 19, 2010 அன்று (தீர்மானம் எண் 793) - இந்த பணிகளுக்கு நகர்மன்ற ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஒப்பந்தப்புள்ளியினை வென்றவர் - S.ரம்போலா (179 குரூஸ்புரம், தூத்துக்குடி) என்ற ஒப்பந்ததாரர். இந்த தீர்மானத்திற்கு அப்போதைய 1வது வார்டு உறுப்பினர் திரு திருத்துவராஜ் தவிர தலைவர், துணைத்தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
படம்: கோப்பு
ஒரு சில தினங்களில், சம்பந்தப்பட்ட 13 சாலைகளிலும் - டிசம்பர் 1, 2010 துவங்கி மார்ச் 31, 2011 க்குள் பணிகள் அனைத்தும் நிறைவுறும் என்ற தகவல் பலகையும் நிறுவப்பட்டது.
படங்கள்: கோப்பு
ஆனால் அறிவித்தபடி, பணிகள் எதுவும் உரிய காலத்தில் துவங்க கூட இல்லை. ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில், பொது மக்கள் - பலர் புகார்கள் தெரிவிக்க துவங்கின. காலதாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
[இது தொடர்பான காயல்பட்டணம்.காம் செய்தி எண்கள்: 601860706304675767817737]
படங்கள்: கோப்பு
ஆனால் உண்மை என்ன?
இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் - துரிதமாக சாலைகள் அமைக்கப்படுவதல்ல; அப்போதைய ஆளும் கட்சிக்கு தேர்தல் நிதி திரட்டுவதே என்று சந்தேகிக்க வைத்தது - பின்னர் வெளிவந்த திரைமறைவு, வங்கி பண பரிமாற்ற விபரங்கள்!
படம்: கோப்பு
இந்த திட்டத்தின் கீழ் ஒரு இன்ச் சாலைக்கூட போடாத நிலையில், பிப்ரவரி 23, 2011 துவங்கி, ஏப்ரல் 29, 2011 வரை, நான்கு காசோலைகள் மூலமாக - ஒப்பந்ததாரருக்கு, 76.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது!
இந்த பணிகள், புதிய நகர்மன்றம் பொறுப்புக்கு வந்து - பல மாதங்கள் கழித்தே நிறைவுற்றது என்பது தனி செய்தி!
மேலே உள்ள விபரங்கள், உள்ளாட்சி மன்றங்களை, எவ்வாறு அரசியல் கட்சிகள் - சட்டத்திற்கு புறம்பான வகையில், தங்கள் தேவைக்கு பயன்படுத்துகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு!
பணம் பலம் மிக்க ஒரு நகர்மன்றத்தலைவர், ஊரின் அனைத்து ஜமாஅத்துகளின் ஆதரவு பெற்ற தலைவர் - இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இதனை தடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. இத்தனைக்கும் - அவர் ஆளும் கட்சியை சார்ந்தவரும் அல்ல! சுயேச்சை தான்!!
இதே சூழலை, 2015 இல் நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், எதிர்கொண்டார். ஆளும் கட்சியின் அப்போதைய மாவட்ட செயலாளர், அவரையும், நகர்மன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசினார். அந்த கூட்டத்தில், ஒப்பந்தப்புள்ளிகள் மூலமே கட்சிகளுக்கு நிதி கிடைக்கும் என்றும், எனவே ஊழலை தடுக்கிறேன் என்று தடங்கல் விதிக்கக்கூடாது என்றும் நகர்மன்றத்தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் - ஒவ்வொரு உறுப்பினரின் வார்டுக்கும் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றவும் கூறப்பட்டது!
இந்த கூட்டத்தின் வாயிலாக உதயமானது தான் - 43 ரோடு திட்டம்!
சட்டத்திற்கு புறம்பாக, உறுப்பினர்கள் - தாமாகவே மதிப்பீடு தயார் செய்து, கூட்டத்தை நடத்த நகர்மன்றத்தலைவரை கோரினர். தலைவர் சம்மதிக்கவில்லை. மதிப்பீடு கோப்புகள் கேட்டார்; கூடுதல் விபரங்கள் கோரினார். தரப்படவில்லை.
துணைத்தலைவர் தலைமையிலேயே, உறுப்பினர்கள் ஜூலை 27, 2015 அன்று நகர்மன்ற கூட்டம் நடத்தினர். தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானமே - மாவட்ட செயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவரின் அறிவுரைப்படி என்றே துவங்கியது! ஒரு வாரத்திலேயே - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை வழங்கியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, தேர்வு செய்யப்பட்ட நகர்மன்றம் அமர்வில் இல்லாத சூழலில் வழக்கு நிறைவுக்கு வந்தது.
வெவ்வேறு காலகட்டங்களில், இதே போன்ற சூழலில், இரு தலைவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியில் இணைந்தார் என குற்றம்ச்சாட்டப்பட்ட நகர்மன்றத்தலைவர், ஆளும் கட்சி நெருக்கடியை பற்றி எந்த கவலையும்படவில்லை; சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு துணையும் போகவில்லை!!
திருமதி ஐ.ஆபிதா சேக் உடைய இந்த நேர்மையான நிலைப்பாடு, வளர்ச்சியினை பாதித்தது என சிலர் அப்போதும் பரப்புரை செய்தனர்; தற்போதும் செய்து வருகிறார்கள். இதனால் - கஜானாவில் பல கோடி ரூபாய் அவர் விட்டு சென்றதாகவும், அவர் வெளிவந்த பின்னர், அந்த பணம் முழுவதும் சுருட்டப்பட்டு விட்டது என்றும் சில பரப்புரைகள் எடுத்துவைக்கப்பட்டுள்ளது.
தன் பதவிக்காலம் முடியும் தருவாயில், திருமதி ஐ.ஆபிதா சேக், நகராட்சி கஜானாவில் எவ்வளவு விட்டு சென்றார் என பார்ப்பதற்கு முன்பு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், எவ்வளவு விட்டு சென்றார் என பார்ப்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 3, 2018; 7:30 pm]
[#NEPR/2018120302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | } |