பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அக்டோபர் 2011 - உள்ளாட்சி தேர்தலில், அமோக வெற்றிபெற்ற திருமதி ஐ.ஆபிதா சேக் - காயல்பட்டினம் நகராட்சி தலைவியாக, பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற காலகட்டத்தில் (2011), காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் எவ்வளவு தொகை இருந்தது, அவரின் ஐந்தாண்டு பதவி காலத்தில் (2011 - 2016) எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது, அவரின் பதவிக்காலம் நிறைவில் (2016) - காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் எவ்வளவு தொகை இருந்தது போன்ற விபரங்களை பார்ப்பதற்கு முன்பு - அவர் கையில் வந்த காயல்பட்டினம் நகராட்சி, எந்த நிலையில் வந்தடைந்தது என பார்க்கலாம்.
2006 ஆம் ஆண்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வுக்கு பின்னர் நடந்த திரைமறைவு காட்சிகள், பேரங்கள் - முகநூல், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம் என்பதால் - பலருக்கு தெரியாது.
2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராக ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - பொறுப்புக்கு வந்தார். இவர் மக்களால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்.
நகரை சார்ந்த ஒரு அமைப்புக்கும், ஒரு தனி நபருக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியில் பொறுப்புகள் பங்களிக்கப்பட்டது.
தமிழகத்திலேயே எங்கும் காணாத அவலம் - ஒருவர் 2.5 ஆண்டு பதவியில் இருப்பார்; மற்றொருவர் - மீதி 2.5 ஆண்டு இருப்பார் என துணைத்தலைவர் பதவி, இருவருக்கு கூறுபோடப்பட்டது.
இந்த ஏற்பாடு நீண்ட நாட்கள் - சுமூகமாக நிலைக்கவில்லை.
நவம்பர் 27, 2007 அன்று, தான் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில், ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் ராஜினாமா செய்தார். நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் அவர் அனுப்பிய தன்னிலை விளக்கம் கீழே வழங்கப்படுகிறது.
==============================
27-11-2007 அன்று என் தலைமையில் நடைபெற்ற நகராட்சிக்கூட்டத்தில் உறுப்பினர் சொளுக்கு அவர்கள் தனது வார்டில் சாலை போடுவது பற்றி ஏன் அஜண்டாவில் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.
எல்லா இடங்களிலிருந்தும் சாலைப்பணிகள் பற்றிய மனுக்கள் அதிக அளவில் வந்துள்ளது. நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அங்கீகரித்த தீர்மான சம்பந்தப்பட்ட சாலைப்பணிகள் மட்டும் இக்கூட்ட அஜண்டாவில் சேர்ப்பது என்றும், மற்ற புதிய சாலைப்பணிகளை அடுத்த கூட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நானும் நிர்வாக அதிகாரியும் முடிவு செய்ததை நான் விளக்கினேன். அதன் பிறகும் என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத உறுப்பினர் சொளுக்கு அவர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டடார்.
அவரோடு காசிராஜன் என்ற உறுப்பினரும் மற்றும் சில உறுப்பினர்களும் கூச்சல் குழப்பம் செய்தார்கள். மிகவும் தரக்குறைவாக என்னை விமர்சனம் செய்து பேசினார்கள். பதவி விலகும்படியாக கூச்சலிட்டார்கள். தொடர்ந்து கூட்டத்தை நடத்த விடாமல் குழப்பம் விளைவித்தார்கள்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் எனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு பதவி விலகல் கடிதத்தை நிர்வாக அதிகாரி அவர்களிடம் கொடுத்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன். எனது பதவி விலகலை கேள்வியுற்ற ஐக்கியப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ கட்சியினர்கள் என்னை சந்தித்து ராஜினாமாவை திரும்பப் பெற கேட்டுக் கொண்டதின் பேரில் நான் அன்றே, எனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக அதிகாரி அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டேன்.
என்னை எப்படியாவது பதவியிலிருந்து இறக்கம் செய்தால் தான் தங்களது நோக்கம் நிறைவேறும் என்ற எண்ணம் கொண்ட சில உறுப்பினர்கள் இதனை பெரிதுபடுத்தி மிகைப்படுத்தி ஊடகங்களுக்கு பொய்யான செய்திகளை கொடுத்துள்ளார்கள்.
நமதூர் அனைத்து ஜமாஅத், பொது நல அமைப்புக்களின் கூட்டமைப்பான காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் வேண்டுதலை ஏற்று நமதூருக்கு நன்மையாக காரியங்களைச் செய்யலாம் என்ற தூய்மையான எண்ணத்தோடு நான் நகராட்சி தலைவராக சம்மதித்தேனே தவிர பதவி ஆசை எனக்கு துளியும் இருந்ததில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதற்கு ஊர் மக்கள் உறுதுணையாக இருக்கும்படியான அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தலைவர், மூன்றாம் நிலை நகராட்சி,
காயல்பட்டணம்.
படங்கள்: கோப்பு
===============
இந்த தன்னிலை விளக்கத்தில் இருந்து நாம் அறிய முடிவது என்ன?
ஊரின் அனைத்து ஜமாஅத்துகளின் ஆதரவும், பொது நல அமைப்புகளின் ஆதரவும், பண பலமும் இருந்தாலும், மன தைரியம், திறமை இருந்தால் மட்டுமே - நகர்மன்றத்தலைவர் பொறுப்பில், ஊழல் / மோசடி செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் நகராட்சிக்குள் நுழைந்தவர்கள் மத்தியில், நேர்மையாக நிலைக்க முடியும் என்பதே ஆகும்.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் சந்தித்த பிரச்சனைகளை விட, ஊழல்/மோசடி புரியவேண்டும் என்ற ஒரே நோக்கில் நகராட்சிக்குள் நுழைந்திருந்த பெருவாரியான உறுப்பினர்கள் / அதிகாரிகள் மூலம் - பல மடங்கு அதிக நெருக்கடிகளை சந்தித்த திருமதி ஐ.ஆபிதா சேக், ராஜினாமா செய்யவில்லை; அந்த நெருக்கடிக்கு பின்னால் இருந்த நகரின் ஜனநாயக விரோத அமைப்புகளிடமும், நகரின் ஆதிக்க சக்திகளிடமும், நிலப்பிரபுத்துவவாதிகளிடமும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளிடமும் சரண் அடையவில்லை; மாறாக எதிர்த்து போராடினார்.
2011 - 2016 ஆபிதா சேக் பதவிக்காலத்தை பொதுமக்கள் மீள் பார்வை செய்யும் போது, இந்த பின்னணியையும், நாட்டின் உள்ளாட்சி மன்றங்களில் நிலவும் சூழல்களையும் அறிந்திருந்தால் மட்டுமே - முழுமையான பார்வையை பெற முடியும் என்பதற்காகவே - இந்த வரலாற்று சுவடு - இங்கு நினைவு கூறப்படுகிறது.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 2, 2018; 6:30 pm]
[#NEPR/2018120202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | } |