காயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, நாகர்கோவில் பைரவி ஃபவுண்டேஷன் நிறுவனம் ஆகியன இணைந்து, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியிலும், பின்னர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கிலும் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி & நிகழ்ச்சியை நடத்தியுள்ளன.
சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் நெய்னா ஸாஹிப் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை முன்மொழிய – அனைவரும் வழிமொழிந்தனர்.
திருச்செந்தூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் லெட்சுமணசாமி மரக்கன்றுகளை நட்டதோடு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – பள்ளியின் 163 மாணவர்களுக்கு வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
பின்னர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கக் கோரியும் முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் பேரணி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு, சதுக்கைத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, முதன்மைச் சாலை, முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு வழியாக காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தைச் சென்றடைந்தது.
நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். தேசிய பசுமைப் படை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, அதன் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப்ரகாஷ், பைரவி ஃபவுண்டேஷன் நிர்வாகி ஷோபா, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பென்சர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியின்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நன்றியுரை, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள், அப்பள்ளி & எல்.கே.மேனிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
|