காயல்பட்டினம் பப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடக் கோரி, தமிழக அரசிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
டிசம்பர் 30, 2013 அன்று - அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா - காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ,துணை மின் நிலையத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த துணை மின் நிலையத்திற்கு தேவையான 90 சென்ட் நிலம், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பில், பொது மக்களிடம் திரட்டப்பட்ட சுமார் 25 லட்சம் ரூபாய் நிதிக்கொண்டு, தனியாரிடம் வாங்கப்பட்டு - 2011 இல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 2012 ஜூன் இல் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்ட இப்பணிகள், 2013 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவுற்றன.
ஒரு துணை மின் நிலையத்திற்கு - நான்கு லைன்மென் மற்றும் இரண்டு வயர்மென் தேவை.
தற்போது அந்த துணை மின் நிலையம் செயல்பட துவங்கியிருந்தாலும், இது வரை அந்த துணை மின் நிலையத்திற்கு தேவையான எந்த ஊழியர்களும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் - அந்த துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும்போது எல்லாம், அங்கு எந்த பணியாளர்களும் இல்லாத காரணத்தால், வெகு தொலைவில் உள்ள - காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக ஊழியர்கள், வந்து பழுதுபார்க்கவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் - பொதுமக்களுக்கு பெருத்த இன்னல் ஏற்படுகிறது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து - காயல்பட்டினத்தில் மட்டும் இன்றி, அருகாமை ஊர்களுக்கும் மின் விநியோகம் நடக்கிறது.
எனவே - கடந்த 5 ஆண்டுகளாக, ஊழியர்கள் இல்லாமல் இயங்கி வரும் காயல்பட்டினம் துணை மின் நிலையத்திற்கு - ஊழியர்களை பணியமர்த்திட வேண்டி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக -
// செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களின் பரிந்துரையுடன்) மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் திரு பி.தங்கமணி
// எரிசக்தி துறை அரசு முதன்மை செயலர் திரு முஹம்மது நசீமுத்தீன் IAS
// தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு விக்ரம் கபூர் IAS ஆகியோரிடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 7, 2018; 4:30 pm]
[#NEPR/2018120701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|