[பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
இத்தொடரின் பாகம் 1 முதல் பாகம் 9 வரையில் நாம் கண்டது போல், காயல்பட்டினம் நகராட்சியின் 2011-2016 நிர்வாக காலத்தில், குறைந்தது 50 கோடி ரூபாய் மதிப்பிலான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தின் நகர்மன்றத்ததலைவர் திருமதி ஐ,.ஆபிதா சேக், கஜானாவில் விட்டுச்சென்ற தொகை - நடந்துக்கொண்டிருந்த, நிர்ணயம் செய்யப்பட்ட பணிகளுக்கான தொகைகள் போக - சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே! ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், தன் பதவி காலத்தில் விட்டுச்சென்ற பணத்திற்கு ஏறத்தாழ நிகரான தொகை இது!!
இந்த 6 கோடி ரூபாயில் பெருவாரியான பங்கு - SFC மானிய வகையை சார்ந்தது. அந்த மானிய கொள்கைப்படி, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள (PRIORITIES) பணிகளுக்கே அந்த தொகையை செலவு செய்ய இயலும்.
உண்மை இவ்வாறிருக்க - ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் - 15 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் நிதியினை, செலவு செய்யாமல், திருமதி ஆபிதா சேக், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் விட்டு சென்றார் என்ற பொய்யான பரப்புரையை ஏன் மேற்கொண்டார்கள்?
இந்த கேள்விக்கான பதில் - காயல்பட்டினம் நகரின் பஞ்சாயத்து தலைமைக்கான நீண்ட வரலாற்றில் புதைந்துள்ளது.
காலம்காலமாக - காயல்பட்டினம் உள்ளாட்சி அமைப்பின் தலைமை, நகரின் செல்வந்தர்கள் அலங்கரிக்க, அவர்களின் பிறப்புரிமையாகவே பார்க்கப்பட்டு வந்தது. அந்த பொறுப்பினை ஏற்று - நகர் நலப் பணிகளைச் செய்ய, சாமானியர்கள் எவரும் கனவு கூட காண இயலாது. பஞ்சாயத்து / நகராட்சி உறுப்பினர்கள் போன்ற அதிக பணி எதிர்பார்ப்பு உள்ள பொறுப்புகள், நகரின் சாமானியர்களுக்கு - ஆதிக்கசக்திகளின் எழுதப்படாத விதியாக - ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலை 2011 இல் மாறியது.
அவ்வாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும், திருமதி ஐ.ஆபிதா சேக் அவர்களிடம் படுதோல்வியை தழுவினர். அந்த தோல்வியில் இருந்து இன்று வரை அவர்கள் மீளவில்லை.
பணம், அதிகாரம், ஆள்பலம் எவ்வளவு இருந்தாலும், நேர்மை துணையில்லை என்றால் நிலையான வெற்றிக்காண இயலாது என்ற வாழ்நாள் பாடத்தை அந்த தேர்தல் - அந்த வர்க்கத்திற்கு - புகட்டியது.
2011 தேர்தலுக்கு பிறகு, அந்த கூட்டம் - பெருவாரியான, நகர்மன்ற உறுப்பினர்களை கையில் எடுத்துக்கொண்டு, ஆபிதா சேக் தலைமையிலான நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து, அவரை பதவி விலக செய்ய, முயற்சி செய்தது. அதிலும் தோல்வியை தழுவியது!
ஊழலில் தழைத்த, இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த IAS அதிகாரி ஒருவரின் ஆலோசனைப்படி, நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது அந்த கூட்டம்! பணம், அதிகாரம் மமதை - சில நேரங்களில் கண்ணை மறைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்றத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர இயலாது என்ற சட்டவிதி - அந்த கூட்டத்திற்கு தெரியாமல் போனது!! அவர்களின் அந்த முயற்சியினை உயர்நீதிமன்றம் தடுத்தது. அந்த கூட்டம் மீண்டும் தோல்வியை தழுவியது!
பிறகு, நகர்மன்றத் தலைவரை புறந்தள்ளிவிட்டு - துணைத்தலைவர், உறுப்பினர்கள் தலைமையில் தங்கள் காரியங்களை சாதிக்கலாம் என முயற்சி செய்தது, அந்த ஆதிக்க கூட்டம். அதிலும் தோல்வியை கண்டது!
ஆதிக்க சக்திகளுக்கு எதிரான இந்த முக்கிய போராட்டங்களுக்கு மத்தியிலும், சில பணிகள் சில காலம் தடைபட்டாலும், பல பணிகள் நடைபெற்றன. குறிப்பாக - நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம், இரண்டாம் குடிநீர் திட்டம், பல சாலைகள், மழைநீர் வடிகால்கள், அம்மா உணவகம், திடக்கழிவு திட்டங்கள் போன்றவை! முக்கியமாக - நம் வரிப்பணத்தில் இயங்கும் நகராட்சி குறித்த விழிப்புணர்வு, ஆர்வம் - அதிகமான மக்களை, இந்த வெளிப்படையான நிர்வாக காலகட்டத்தில் சென்றடைந்தது.
இந்த பின்னணியில் தான், 2011-2016 காலகட்டத்தில் நகராட்சியில் ஒரு பணியும் நடக்கவில்லை என்று மேற்கொள்ளப்படும் பொய்யான பரப்புரையை நாம் பார்க்கவேண்டும்.
காயல்பட்டினம் வரலாற்றில் - 2011 உள்ளாட்சி தேர்தல், ஒரு திருப்புமுனை.
அந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டம், அடுத்து வரும் தேர்தலில் - மீண்டும் தலைதூக்க முயற்சி செய்கிறது.
மக்களை ஆளவேண்டியது மக்களா அல்லது குறுகிய அதிகார வட்டமா?
இது தான் நம் அனைவரின் முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை, கண்டிப்பாக காலம் சொல்லும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 8, 2018; 9:30 am]
[#NEPR/2018120801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10] |