பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
2011 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பதவிக்காலம் - அக்டோபர் மாதம் 2016 இல் நிறைவுற்றது. அதுவே - அந்த நிர்வாகத்தின் இறுதி - நிதியாண்டு (2016-2017). அந்த நிதியாண்டு / பதிவிக்காலம் இறுதியில், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் இருந்த நிதி எவ்வளவு?
2016-2017 நிதியாண்டில் மட்டும், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவிற்கு புதிதாக வந்த தொகை (RECEIPTS) - 7 கோடியே, 82 லட்சத்து, 9 ஆயிரத்து, 120 ரூபாய் (7,82,09,120).
அந்த நிதியாண்டில் (2016-2017), காயல்பட்டினம் நகராட்சி செலவு செய்த தொகை (PAYMENTS) - 10 கோடியே, 45 லட்சத்து, 45 ஆயிரத்து, 376 ரூபாய் (10,45,45,376) ஆகும்.
அதாவது, அவ்வாண்டு புதிதாக வந்த தொகையை விட, சுமார் 3 கோடி ரூபாய் கூடுதலாக - காயல்பட்டினம் நகராட்சியால் செலவு செய்யப்பட்டது.
அந்நிதியாண்டு (2016-2017) இறுதியில், காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 16 கோடியே, 60 லட்சத்து, 30 ஆயிரத்து, 118 ரூபாய் (16,60,30,118).
இந்த தொகையே (16 கோடி ரூபாய்) - திருமதி ஐ.ஆபிதா சேக் பதவிக்காலம் நிறைவு நிதியாண்டில் (2016-2017), காயல்பட்டினம் காஜினாவில் இருந்த தொகை.
நாம் ஏற்கனவே கண்டது போல் - காயல்பட்டினம் நகராட்சியின் தற்போதைய வங்கி கணக்குகளின் எண்ணிக்கை - 23. பெருவாரியான இந்த கணக்குகள், குறிப்பிட்ட பணிகளுக்காக துவக்கப்பட்டவை.
அந்த வங்கி கணக்குகளில் இருந்த, இந்த 16 கோடி ரூபாயையும், எந்த வகைகளுக்கான தொகை என்பதை விரிவாக பார்ப்போம்.
// அந்த தொகையில் சுமார் 74 லட்சம் ரூபாய், இரு வங்கி கணக்குகளில் - FIXED DEPOSIT தொகையாக இருந்தவை.
// அந்த தொகையில் சுமார் 50 லட்சம் ரூபாய், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (கழிப்பறைகள், துப்புரவு சாதனங்கள் போன்றவற்றுக்கு) மத்திய அரசு வழங்கிய மானியத்தொகை; அந்த பணிகள் பல நடைபெற்றுக்கொண்டும், நிறைவுறும் தருவாயிலும் இருந்தன.
// அம்மா உணவகம் வகை வங்கி கணக்கில் இருந்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய்.
// உள்ளூர் குடிநீர் விநியோகம் கணக்கில் இருந்த தொகை 1.36 கோடி ரூபாய்.
// 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பொன்னங்குறிச்சி குடிநீர் திட்டப்பணிகள் வகை வங்கி கணக்கில் இருந்த தொகை 7.3 கோடி ரூபாய்.
// IUDM திட்டத்திற்கு என வந்த நிதியில், வங்கி கணக்கில் - பாக்கி இருந்த நிலுவை தொகை 22 லட்சம் ரூபாய்.
// இது தவிர முந்தைய (ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான்) நிர்வாகம் (2006 - 2011) காலத்தில் அமல்படுத்தப்பட்ட SPECIAL ROADS PROJECT (SRP) திட்டத்தின் மீதி தொகை 12 லட்சம் ரூபாய்
// முந்தைய (திருமதி வஹீதா) நிர்வாகம் (2001 - 2006) காலத்தில் அமல்படுத்தப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீதி தொகை 3.7 லட்சம் ரூபாய்
மேலே விவரிக்கப்பட்ட தொகைகளை கூட்டினாலேயே, 10 கோடி ரூபாய் வரும். இந்த பணம், நாம் கண்டது போல் - நடைபெற்றுக்கொண்டிருந்த குடிநீர் திட்ட பணிகளுக்கு, உள்ளூர் குடிநீர் விநியோகம் பராமரிப்பு பணிகளுக்கு என ஏற்கனவே திட்டமிடப்பட்ட, வேறு எந்த வகைக்கும் பயன்படுத்த முடியாத, தொகை. எனவே - இதனை, திருமதி ஐ.ஆபிதா சேக் - பயன்படுத்தாமல் விட்டுச்சென்ற தொகையாக கூற எந்த அடிப்படையும் இல்லை.
இந்த 10 கோடி ரூபாயை கழித்தால் - 2016-2017 நிதியாண்டில், (திருமதி ஐ.ஆபிதா சேக் உடைய நிறைவு நிதியாண்டு) காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் இருந்த தொகை சுமார் 6 கோடி ரூபாய் தான். இது முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் விட்டு சென்ற 5.4 கோடி ரூபாய் தொகைக்கு ஏறத்தாழ ஒத்த தொகை.
இது மட்டும் அல்ல.
திருமதி ஐ.ஆபிதா சேக் விட்டுச்சென்ற (ஏற்கனவே நடந்து வரும் / கண்டிப்பாக செய்ய வேண்டிய அடிப்படை பணிகளுக்கான திட்டமிட்ட தொகையை தவிர மீதி) சுமார் 6 கோடி ரூபாயில், 5.7 கோடி ரூபாய் - தமிழக அரசின் SFC மானியத்தொகையாகும். இந்த தொகை பணத்தை - மாநில அரசு நிர்ணயம் செய்து வரிசைப்படுத்தியுள்ள பணிகளுக்கு, முக்கியத்துவம் அடிப்படையில் (PRIORITIES) தான் செலவு செய்யமுடியும்.
ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய நிறைவு நிதியாண்டில் அவர் கஜானாவில் விட்டுச்சென்ற சுமார் 5.4 கோடி ரூபாயில், SFC வகை மட்டும் 3.9 கோடி ரூபாய் ஆகும்!
இதுவரை நாம் பார்த்த ஆதாரங்கள் - ஊழலை தடுக்கிறேன் என்று பணிகள் எதுவும் செய்யாமல் கோடி கணக்கில், திருமதி ஐ.ஆபிதா சேக், நகராட்சி கஜானாவில் விட்டு சென்றார் என்று நகரின் - ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் - கூறியது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என்பதனை தெளிவு படுத்துகின்றன.
மேலும் - இத்தொடரின் 9 பாகங்கள் வாயிலாக, குறைந்தது 50 கோடி ரூபாய் அளவிலான செலவீனங்கள், திருமதி ஐ.ஆபிதா சேக் பதவி காலத்தில் காயல்பட்டினம் நகராட்சியில் நடந்துள்ளன என்பதனை- வங்கி கணக்குகள் சொல்லும் ஆதாரங்கள் மூலம் காண முடிந்தது.
[இந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து பணிகள் விபரமும் - வேறொரு தருணத்தில், விரிவாக - இறைவன் நாடினால் - தகவலாக வழங்கப்படும்.]
பண வீக்கத்தை (INFLATION) கணக்கில் எடுக்கும்போதும், திருமதி ஐ.ஆபிதா சேக் காலகட்டத்தில் நகராட்சியின் அடிப்படை செலவீனங்கள் (முந்தைய காலத்தை விட), இரட்டிப்பாகியுள்ளது என்பதனை கணக்கில் எடுக்கும் போதும், அவர் விட்டு சென்ற தொகை - உண்மையில் - ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், தனது பதவி நிறைவில் விட்டு சென்ற தொகையை விட குறைவுதான் என்பதனையும் மறுக்க இயலாது.
உண்மை இவ்வாறிருக்க - நகரின் - ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் - ஏன் இந்த பொய்யான பரப்புரையில் ஈடுபட்டனர் / ஈடுபட்டு வருகின்றனர் என்பதனை - இந்த தொடரின் நிறைவு பாகத்தில், இறைவன் நாடினால், அடுத்து காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 6, 2018; 2:30 pm]
[#NEPR/2018120601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
|